மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலுக்குள் சேர்த்தது சீனா..!!!


இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய, இலங்கையுடனான சர்வதேச கொடுக்கல் வாங்கலின் போது மக்கள் வங்கியினால் வெளியிடப்படும் கடன் சான்று பத்திரத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கையுடனான நிர்வாகத்தை முன்னெடுக்குமாறும் அனைத்து சீன முதலீட்டாளர்களுக்கும் அறிவிப்பதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினரிடையே ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய வெளியிடப்பட்ட கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்துமாறு சீனாவின் சிந்தாவோ சீவிங் பயோடெக் நிறுவனம் மக்கள் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக சட்ட திட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கைக்கு அமைய மக்கள் வங்கி செயற்படாது கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் சீன நிறுவனத்திற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், சீன நிறுவனத்திடம் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு உர மாதிரிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் பக்டீரியாக்கள் காணப்பட்ட காரணத்தினால் அந்த உரத்தை கொள்வனவு செய்யாதிருப்பதற்கு இலங்கை தற்போது தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் உர நிறுவனங்கள் இரண்டு, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த சீன நிறுவனத்திற்கான கடன் சான்று பத்திரத்திற்குரிய நிதியை செலுத்துவதைத் தடுத்து தற்போது இடைக்கால தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here