நீர்கொழும்பு துன்கல்பிட்டிய கடலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன சிறுமி சிலாபம் இரணவில கடற்கரை பகுதியில் இன்று வியாழக்கிழமை (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளது என சிலாபம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, துன்கல்பிட்டிய, அளுத்குருவ மீனவ கிராமத்தைச் சேர்ந்த தமாஷா ரொஷாலி எனும் இரண்டரை வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமியும், அவரது பெற்றோரும் சுமார் 15 நாட்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் துன்கல்பிட்டிய கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 18 ம் திகதி குறித்த சிறுமியின் பெற்றோர் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் விறகுக்காக மரம் வெட்டிக்கொண்டிருக்கும் போது சிறுமி கடற்கரையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கடற்கரையோரத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடல் அலை அடித்துச் செல்வதாக ஒருவர் கூக்குரலிட்டு பெற்றோரை அழைத்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோர் காவல்துறை, கடற்படையினரின் உதவியுடன் கடலில் காணாமல் போன சிறுமியை தேடினர். இந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி காணாமல் போன சிறுமி நான்கு நாட்களின் பின்னர் இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் சடலத்தை பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலம் சிலாபம் வைத்தியசாலையல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் துன்கல்பிட்டிய மற்றும் சிலாபம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
sri lanka news