Sunday 3 October 2021

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்..!!!

SHARE

பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோவுக்கு எதிராக அந்நாட்டின் நகரங்கள் எங்கும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சரியாக இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள், வர்த்தகச் சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

கருத்துக் கணிப்புகளிலும் பொல்சொனாரோ மக்கள் செல்வாக்கை பெரிதும் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பை ஜனாதிபதி கையாளும் விதம் குறித்து பெரும்பாலான மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நோய்த் தொற்றினால் பிரேசிலில் 600,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பிரேசிலின் 160க்கும் அதிகமான நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கடந்த சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பொல்சொனாரோவை அகற்றும்படி கோரும் பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.

‘பட்டினி, வறுமை, ஊழல் என்று உலகில் பின்னோக்கிச் செல்லும் அனைத்தையும் இந்த ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஜனநாயகத்தை பாதுகாக்கவே நாம் இங்கு வந்துள்ளோம்’ என்று ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான வெல்டோ ஒலிவேரியா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்தும்படி கோரி பாராளுமன்றத்தில் 100க்கும் அதிகமான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
SHARE