இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!!!


இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்குள் எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை அறுத்து எறிவதோடு படகுகளை சேதமாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் நிலையில் அவற்றை தடுக்க கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநகர் மீனவர்கள் கற்கட தீவுக்கு அருகில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது , இந்திய இழுவைப்படகு ஒன்று குருநகர் மீனவர்களின் படகினை மோதி சேதப்படுத்தியதுடன் , இழுவைப்படகில் வந்த இந்திய மீனவர்கள் , குருநகர் மீனவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவர்களை கடலில் வீசவும் முயற்சித்திருந்தனர்.

இழுவைப்படகு மோதி கடும் சேதங்களுக்கு உள்ளான தமது படகில் குருநகர் மீனவர்கள் கரை திரும்பி இருந்தனர்.

இந்நிலையிலே வடக்கு கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்குமாறு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை இந்திய இழுவை படகுகளால் கடந்த 5 வருட காலத்தில் வடக்கு மீனவர்களின் சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகளை சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ச் ஸ்ரீ வர்தன் ஷ்ரிங்கலாவுடனான சந்திப்பின் போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post


Put your ad code here