Saturday 16 October 2021

எரிபொருள் விலை அதிகரிக்குமா? வெளிவரும் முரண்பாடான தகவல்கள்..!!!

SHARE

எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ள போதிலும் பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எதிர்வரும் 12ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 15 ரூபா நட்டமும், ஒரு லீற்றர் டீசலுக்கு 16 ரூபா நட்டமும் காணப்படுகின்ற நிலையிலேயே, எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டே, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், விலை அதிகரிப்புக்கான கோரிக்கையை விடுத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து அமைச்சரவை கூட்டத்தின் போது, நிதி அமைச்சருடன் தான் கலந்துரையாடியதாகவும், திறைசேரியின் நிலைமை குறித்து நிதி அமைச்சர் தமக்கு தெளிவூட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, எரிபொருள் விலையை அதிகரிக்க மேலும் சில மாதங்கள் ஆகும் எனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதில் அர்த்தமில்லை எனவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

எனினும் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்போது எரிபொருள் விலையேற்றம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
SHARE