கொத்மலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தபோது காணாமல்போயிருந்த நிலையில் 51 நாட்களின் பின்னா் இன்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
பூண்டுலோயா நகரத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 56 வயதான சுப்பையா இளங்கோவன் என்ற பொலிஸ் சார்ஜன்டே சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். கம்பளை வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலிருந்து இவரின் சடலம் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.
நெஞ்சுவலி ஏற்பட்டதால் “சுவசெறிய 1990” அம்பியுலன்ஸ் ஊடாக கடந்த 08 ஆம் திகதி காலை கம்பளை வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், உறவினர்கள் வீடு திரும்பிய நிலையில், சார்ஜன்ட் காணாமற்போனதாக குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news