Tuesday 19 October 2021

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கூட்டம்..!!!

SHARE



மூலப்பொருட்களை பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை முல்லைத்தீவில் சுட்டிக் காட்டினார் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் 

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று(18) காலை 10.30மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளின் பிரதேச செயலாளர்களை சந்தித்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கலாநிதி சுரேன் ராகவன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினூடாக மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

மேலும் வட்டுவாகல், கொக்கிளாய் பாலங்களை அமைத்தல் மற்றும் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

விவசாயிகளால் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினை மற்றும் சமூகத்திலுள்ள பொதுவான பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
SHARE