Friday 8 October 2021

ஹிசாலினி, வித்தியாவுக்கு நடந்தது வேறு எந்த சிறுமிக்கும் இடம்பெறக்கூடாது..!!!

SHARE



டயகமவில் அமைச்சர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிக்கு நடந்தது போல அல்லது வடக்கில் வித்தியாவிற்கு நடந்தது போல எந்த சிறுவர்களிற்கும் துன்புறுத்தல்கள் இடம்பெறக்கூடாது என்ற நோக்கத்தோடு அனைவரும் ஒன்றிணைந்து சிறுவர் பெண்களுக்காக செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பிமல் நிசந்த டி. சில்வா தெரிவித்துள்ளார்.

நான் தமிழ் மொழியில் பேச முடியாக நிலையில் உள்ளேன். எதிர்காலத்திலாவது எமது பிள்ளைகள் மொழி ரீதியான பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்காது வாழப்பழகுவார்கள் என்று நம்புகின்றேன்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ´அனைத்திற்கு முன் குழந்தைகள்´ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நத்தார் தினத்திற்காக இனிப்பு பண்டங்களுடன் வந்து அவற்றை கொடுத்து மகிழ்ந்துவிட்டு, மீண்டும் அடுத்த நத்தாருக்கு வருவது போல் அல்லாமல் இங்கு நேரடியாக வந்து அனைவரோடும் இணைந்து வேலை செய்கின்ற வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கின்றோம்.

கடந்த காலங்களிலே, சிறுவர் மகளீர் விவகாரங்கள் குறிப்பிட்ட நபர்களிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வடக்கில் உள்ள குழந்தைகளையும் தெற்கில் உள்ள குழந்தைகள் போல் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைவாக நாங்கள் அடிமட்டம் வரை வந்து சிறுவர்களுக்காக வேலை செய்கின்றோம். குறிப்பிட்ட அமைச்சர் ஒருவரின் வீட்டில் வேலை செய்த ஒரு குழந்தை நுவரேலியா மாவட்டத்திலே இறந்துள்ளது. அப்படியான ஒரு சம்பவங்கள் இனி எங்கும் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே நாங்கள் ஒன்று கூடியிருக்கின்றோம்.

வடக்கு மாகாணத்தில் வித்தியாவிற்கு இடம்பெற்ற கொடுமையை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். தமிழ்,முஸ்லிம், சிங்கள, மலையாள என்ற எந்த பேதமும் இன்றி குழந்தைகள் எனும் பொழுது எல்லோரும் எமது குழந்தைகள் என்று எங்கள் கடமைகளை செய்வோம்.

ஒரு மாவட்டத்தைவிட்டு வெளியே செல்லும் பெண்கள் அல்லது சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச செயலாளர்கள் செயற்பட வேண்டும்.

குறிப்பாக பொலிசார், சிறுவர் பெண்கள் பிரிவு, மகளீர் பிரிவுகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கிராம மட்ட அதிகாரிகள் இணைந்து செயற்படும் ஒரு வேலைத்திட்டமாக இந்த சிறுவர் பெண்களிற்கான வேலைத்திட்டம் அமைந்துள்ளது.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்கள் இடம்பெறுகின்ற பொழுது பெண்கள் சிறுவர் விடயங்கள் தொடர்பில் பெரிதளவில் பேசப்படுவதில்லை. இனி வரும் காலங்களில் அவ்வாறான விடயங்களிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றம் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட வே்ணடும்

பெண்கள் அல்லது சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை பாதுகாப்பது தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்பட்டதாக அல்லாமல் அனைவருக்கும் வழங்கப்பட்டதாக கருதி செயற்பட வே்ணடும்.

கொவிட் அச்சுறுத்தல் காலத்தில் இச்செயற்திட்டத்தை பல்வேறு நெருக்கடிகளுற்கு மத்தியிலும், சிறுவர்களின் எதிர்காலம் கருதி முன்னெடுத்து வருகின்றோம் என்பதனை எல்லோரும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2015ம் ஆண்டில் 179 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றிருக்கின்றார்கள் இதில் 81 பேர் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்க்ள. 2016ம் ஆண்டு 362 பேர் சென்றுள்ளதுடன், அவர்களில் 64 பேர் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்கள்.

2017ம் ஆண்டில் 232 பேர் சென்றுள்ளதுடன், அவர்களில் 41 பேர் வீட்டு வேலைக்காக சென்றுள்ளனர். 2018ம் ஆண்டில் 216 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளனர். அவர்களில் 71 பேர் வீட்டு வேலைகளிற்காக சென்றுள்ளனர்.

சிறுவர்கள் மது பாவனைக்கு அடிமையாக்கப்படுகின்றார்கள். இந்த விடயங்கள் தொடர்பில் பொலிசார் கூடிய கவனம் எடுக்கப்பட வேண்டும். தற்பொழுது பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

குறிப்பாக பாதிக்கப்படுகின்ற பெண்கள் சிறுவர்களை அவர்களது வீடுகளில் வைத்து பராமரிக்க முடியாத சூழல் ஏற்படுகின்றபொழுது அவர்களை பாதுகாக்கின்ற வகையில் 9 மாகாணங்களிலும் காப்பகங்களை அமைக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
SHARE