யாழ்.மாவட்டத்தில் 3700 குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு இல்லை..!!!


இலங்கை மக்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (01.11.2021) காலை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .

குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் மின்சார பாவனையாளர்கள் மின்சார விநியோகம் தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவற்றைத் தீர்ப்பது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் அவர்களால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக மின்சார பாவனையாளர் புதிய மின்சார இணைப்பு பெறல் , மின்சாரக்கட்டண அறவீட்டுப் பிரச்சனை , மின்சார பட்டியல் பிரச்சனை , மின்சார கணக்கில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இப்பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை மற்றும் மின் பாவனையாளர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படவுள்ள நடமாடும் சேவையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் யாழ் மாவட்ட செயலக தரவுகளின்படி தற்போது வரை மின்சாரம் பெற்றுக் கொள்ளாத 3700 குடும்பங்களுக்கும் குறித்த நடமாடும் சேவையின் மூலம் மின்சார இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு தெரிவித்தார்.

மேலும் மின்சார பாவனையாளர்கள் தமது பிரச்சினைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து உரிய காலப்பகுதிக்குள் தத்தமது கிராம உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவை தொடர்பில் ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்படவுள்ள நடமாடும் சேவையின் மூலம் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் திரு.றொசான் வீரசூரிய, உதவி மாவட்ட செயலாளர் திருமதி.ச.கி.நி.கமலராஜன், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் அலுவல்கள் உத்தியோகத்தர் திரு.மொகமட் றகான், உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்( நிர்வாகம்), கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here