உதயநிதி படத்தில் வடிவேலு?


காமெடியில் பட்டாஸாக வெடிக்கத் தொடங்கி அணுகுண்டாக அதகளம் செய்து கொண்டிருந்தவர் வடிவேலு. கடைசியாக 2017-ல் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்தார். இப்படம், இவருக்கு மிகப்பெரிய ரீ-எண்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடிவேலுவுக்கு பெரிதாக இப்படம் கைகொடுக்கவில்லை.

சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படமும் இல்லையென்றாகிவிட்டது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைவதாக கூறப்பட்ட செய்தியும் பொய்யாகிவிட்டது. இறுதியாக, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கும் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உதயநிதி படத்தில் வடிவேலு சாத்தியமா எனும் கேள்வி எழலாம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் ஒன்றிரண்டாக வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சிமாற்றத்திற்குப் பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வடிவேலு. உதயநிதியுடனான நட்பும் இன்று வரை வடிவேலுவுக்குத் தொடர்கிறது.

அதனடிப்படையில், உதயநிதி படத்தில் வடிவேலு நடிப்பதில் அதிகளவில் சாத்தியம் இருப்பதாகவே சொல்கிறார்கள். மாரிசெல்வராஜ் படமொன்பதால் காமெடியனாக மட்டுமில்லாமல், நல்ல குணச்சித்திர கதாபாத்திரத்தில் வடிவேலுவை எதிர்பார்க்கலாம். முன்னதாக, உதயநிதி தயாரித்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here