கொழும்பு - கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் ரீட் மாவத்தையில் அமைந்துள்ள குதிரைப் பந்தயத்திடலின் பார்வையாளர் கூடத்தின் கீழ் மாடியின் உணவகமொன்றில் இன்று சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இவ்வாறு காயமடைந்த இருவரும் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வாடகை வாகனம் வரும் வரை காத்துக் கொண்டிருந்த இளைஞர்களாவர்.
இவர்கள் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டதன் பின்னர் , கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.
சமையல் எரிவாயு கசிவின் காரணமாகவே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட தீப்பரவல் கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்தோடு வெடிகுண்டு செயழிக்கச் செய்யும் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஸ்தளத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
வெடிப்பிற்கான காரணம் குறித்து உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் இன்றையதினம் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதோடு , கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் 'பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணம்' கால்பந்து இறுதிப் போட்டி இடம்பெற்றிருந்ததோடு , அதில் பிரதம அதிதியான சர்வதேச கால் பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கிஆனி இன்பென்டினோ, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news