Sunday 28 November 2021

முல்லைத்தீவின் பிராந்திய ஊடகவியலாளர் மீதான தாக்குதலைக் கண்டிக்கின்றோம் - யாழ்.ஊடக மன்றம்..!!!

SHARE


இலங்கையிலே குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் இராணுவத்தினராலும் பொலிஸாரினாலும் மற்றும் ஏனைய தரப்புகளாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றமையை யாழ் ஊடக மன்றம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.

இன்று யாழ் ஊடக மன்றம் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு பகுதியில் உள்ள முல்லைத்தீவு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகையினை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த இராணுவத்தினரால் பிராந்திய ஊடகவியாலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று மாலை செய்தி சேகரிக்கச் சென்ற மேலும் இரண்டு ஊடகவியலாளர்களையும் இராணுவத்தினர் கடுமையாக அச்சுறுத்தி தாக்குவதற்கு முயற்சித்துள்ளமையும் தெரியவருகின்றது.

தற்போதைய அரசாங்கம் நாடு முழுவதும் இராணுவ மயமாக்கலை மேற்கொண்டிருக்கும் இந்த வேளையிலே ஊடகவியலாளர்களின் சுதந்திரமும் இராணுவத்தின் பிடியில் நசுக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது.

ஊடகவியலாளர்களின் கடமைகள் பொறுப்புகள் தொடர்பில் முப்படையினருக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஊடக அமைச்சிற்கும் ஜனாதிபதிக்கும் உண்டென்பதை எப்போதும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

ஊடகம் என்பது எப்போதும் நடுநிலையாக உள்ளதை உள்ளபடி சொல்லுகின்ற பணியை மேற்கொள்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. குறித்த ஊடகவியலாளர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு யாழ் ஊடக மன்றம் வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதோடு குறித்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளும் மிக துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்துகின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

SHARE