செய்வினையில் இருந்து மீள தேவாலயத்தில் தங்கியிருந்த இளைஞனே காயமடைந்துள்ளார்..!!!


செய்வினை நோயினை குணமாக்குவதற்காக தேவலாயத்தில் தங்கியிருந்த இளைஞனே தேவாலய முகப்பு கூரை இடிந்து விழுந்து காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் வடமராட்சி புல்லாவெளி செபஸ்ரியார் தேவாலய முகப்பு கூரை இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடிந்து வீழ்ந்தது.

அதன் போது இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த அனர்த்தத்தில், கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய வினோத் என்ற இளைஞனே காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் , அதற்கு செய்வினையே காரணம் என கூறப்பட்டதால், இளைஞனின் சகோதரர்களால் தேவாலயத்தில் தம்பியை தங்க வைத்து, பரிகாரம் செய்வதன் ஊடாக குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையின் பிரகாரம் இரவில் தேவாலயத்தில் தங்கியுள்ளனர்

நேற்று வியாழக்கிழமை இரவு தேவாலயத்தில் தங்கிய நிலையில், இன்று காலையில் எழுந்த வினோத், தேவாலயத்தில் உள்ள சொரூபங்களுக்கு மெருகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீர் என முகப்பு கூரை இடிந்து வீழ்ந்துள்ளது.

இவ் அனர்த்தத்தில் சிக்கியதில், இளைஞனின் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டு, அவசர அம்பீலனஸ் சேவை மூலமாக, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேவாலயம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்தது என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




Previous Post Next Post


Put your ad code here