திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்..!!!




புத்தளம் தில்லையடி பகுதியில் உள்ள இரவு நேர ஹோட்டலுக்கு முன்பாக நேற்றிரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்பவம் இடம்பெற்ற போது தில்லையடி பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு எடுத்துச் செல்வதற்காக வருகை தந்த நபர் ஒருவருடைய மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.

குறித்த நபர் ஹோட்டலுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உணவுத் தேவைகளை முடித்துக் கொண்டு பயணிப்பதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிளை இயக்க ஆரம்பித்துள்ளார்.

இதன்போதே, குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து , குறித்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட பணியாளர்களும், ஹோட்டலுக்கு வருகை தந்தவர்களும் கூட்டாக இணைந்து சில நிமிடங்களில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால், குறித்த மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ளது. எனினும், உயிர்ச் சேதங்கள் எதுவுமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடித்துச் சிதறும் சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில், இவ்வாறு ஹோட்டலுக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தமை தில்லையடி பகுதியில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Previous Post Next Post


Put your ad code here