எரிவாயுவை ஒழுங்குறுத்துவதற்கு நாம் தயார்

 


மின்சாரத் துறை மற்றும் பெற்றோலிய தொழிற்துறையின் ஒழுங்குறுத்துனரான இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, தற்போது அதிகளவில் பேசப்பட்டுவரும் எல்.பி எரிவாயு (LP Gas) மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தொழில்துறைகளை ஒழுங்குறுத்துவதற்கு தயாராகவிருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், எல்.பி எரிவாயுவிற்கான தரநிலையை இலங்கை தர நிர்ணய நிறுவனத்துடன் (SLSI) இணைந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் வகுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்ட எல்.பி எரிவாயு (LP Gas) தரநிலையானது, எரிவாயு நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட முடியும். எனினும், தரநிலையை நடைமுறைப்படுத்துவதற்கு இ.பொ.ப.ஆ.இற்கு சட்டப்பூர்வ அதிகாரங்கள் இல்லை

எல்.பி எரிவாயு தரநிலை இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் நடைமுறைகளுக்கு இணங்க வரைவு செய்யப்பட்டுள்ளதுடன், பங்குதாரர்களின் கருத்துகள் மற்றும் பொது கருத்து கேட்டல் செயல்முறை மூலம் பெறப்பட்ட உள்ளீடுகளை கருத்தில் கொண்டு இறுதி வரைவு தயாரிக்கப்படுகிறது.

எல்.பி எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோரின் பாதுகாப்புத் தேவைகள் புதிய தரநிலையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதாவது எரிவாயு சிலிண்டர்களின் அதிகபட்ச அழுத்தம், வீட்டு பாவனைக்கான எரிவாயுவின் அதிகபட்ச புரோபேன் சதவீதம், பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சிலிண்டரின் மேற்பரப்பில் நிகர எடை, சிலிண்டரில் அடைக்கப்பட்ட திகதி உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட வேண்டும் போன்றனவாகும்.

எல்.பி எரிவாயுக்கென ஏற்கனவே தரநிலை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இதுவரை சட்டப்பூர்வமாக்கப்படவோ அல்லது நடைமுறைப்படுத்தப்படவோ இல்லை.

தரநிலை அமுல்படுத்தப்படாமைக்கு எல்.பி எரிவாயுவை ஒழுங்குறுத்துவதற்கான ஒழுங்குறுத்தல் அமைப்பு இல்லாமையும் ஒரு காரணமாகும்.

எல்.பி எரிவாயு உட்பட பெற்றோலிய தொழிற்துறையை ஒழுங்குறுத்துவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த 2002 இல் நியமிக்கப்பட்டது. இருப்பினும், இன்றுவரை இத்துறையை ஒழுங்குறுத்துவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவில்லை.

2019 இல், இலங்கை தர நிர்ணய நிறுவனத்துடன் இணைந்து பெற்றோலிய பொருட்களுக்கான தரநிலை வரைவை உருவாக்கத் தொடங்கினோம். பெற்றோல், டீசல் போன்ற பொருட்களுக்கு ஏற்கனவே தர நிர்ணயம் செய்துள்ளோம். பெற்றோலியப் பொருட்களைப் பயன்படுத்தும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கு இந்த தரநிலைகளை அமுல்படுத்த வேண்டும்.

எனவே, இவற்றைச் அமுல்படுத்துவதற்கு ஒழுங்குறுத்தல் அதிகாரங்களைக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கான அவசியம் உள்ளதை நாம் காண்கிறோம்.  

1998 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட எல்.பி எரிவாயு இன் முந்தைய தரநிலையானது (SLS 712) வணிக ரீதியான புரொப்பேன் (commercial propane), வணிகப் பியூட்டேன் (commercial butane), புரொப்பேன் (propane) மற்றும் பியூட்டேன் கலவை (butane mixture) மற்றும் புரொப்பேனின் சிறப்பு கடமை (special duty propane) ஆகிய பயன்பாட்டிற்கான விவரக்குறிப்பை வழங்குகிறது.

இருப்பினும், உள்நாட்டு சமையலுக்கு புரொப்பேன் மற்றும் பியூட்டேன் பயன்பாட்டின் எந்த விகிதத்தையும் இது கட்டாயப் படுத்தவில்லை.

நுகர்வோரின் பாதுகாப்பை விரைவுபடுத்தும் வகையில் பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தை திருத்துவதன் மூலம் LP எரிவாயு சந்தையின் ஒழுங்குறுத்துகை அதிகாரங்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்க முடியும்.

எல்.பிஜிக்கு சரியான ஒழுங்குறுத்துகை இல்லாததன் விளைவுதான் இப்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகளை தவிர்க்கும் வகையில் பெற்றோல், டீசல், விமான எரிபொருள், கடல் எரிபொருள், உலை எண்ணெய், மண்ணெண்ணெய், இயற்கை எரிவாயு, உராய்வுநீக்கி எண்ணெய் மற்றும் கிரீஸ் உட்பட அனைத்து பெற்றோலிய தயாரிப்புகளையும் நாங்கள் ஒழுங்குறுத்த வேண்டும்.

சட்ட வரைஞர்களால் தயாரிக்கப்பட்ட கீழ்நிலை பெற்றோலியலியத் தொழில்துறையை ஒழுங்குறுத்துவதற்கான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொழில்துறை சட்டம் 2012 இல் சட்டமாதிபர் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும், அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின்படி சரிபார்த்து, சட்டமா அதிபரால் மறுசான்றளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வேண்டும்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் சக்திவலு அமைச்சு, பெற்றோலிய பொருட்களின் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய பிரகடனத்தையும், முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை கடந்த டிசம்பர் முதலாம் திகதி அன்று அறிமுகப்படுத்தியது.

அனைத்து தரமான பெற்றோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் நுகர்வோரின் புகார்களைக் கையாளவும் மற்றும் அதன் தயாரிப்பு மற்றும் சேவையின் தரம் தொடர்பாக நுகர்வோர் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்கவும் என இந்தப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது” என்றுள்ளது. 

Previous Post Next Post


Put your ad code here