நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க (Mahinda Hathurusinghe) தெரிவித்துள்ளார்.
விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்து ஐந்தாயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளை தேடி சென்றுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்
கொவிட் வைரஸ் தொற்றுக்கு முற்பட்ட காலத்தில் வருடாந்தம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பணியாளர்கள் சென்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டிலேயே இந்த எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி கண்டது.
எனினும் எதிர்வரும் காலங்களில் இந்தத் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்க முடியும். இப்போதுள்ள நிலையில் நாளாந்தம் 400 - 500 பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்கின்றனர்.
மத்தியகிழக்கு நாடுகளுக்கான வேலைவாய்ப்புகளுக்காக செல்லும் சம்பிரதாயமான நிலைமைகளை தாண்டி ஏனைய நாடுகளுக்கும் பணியாளர்களை அனுப்புவது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.
கொரியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.
அந்த நாடுகளில் எமது மனித வளங்களை பயன்படுத்தும் ஆரோக்கியமானதும், அதேபோல் தகுதியும் பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களை அனுப்புவதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்தார்