Tuesday 25 January 2022

வடக்கில் கோவிட்-19 தொற்றாளர்கள் அதிகரிப்பு – கொழும்பு சென்று திரும்பும் பலருக்கு தொற்று..!!!

SHARE

தென்னிலங்கைக்கு பொதுப் போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்புவோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரவலாகக் கண்டறியப்படுகிறது என்று சுகாதார அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருவோரிடம் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பெருமளவானோர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை தகவல்கள் குறிப்பிட்டன.

தென்னிலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும் கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றன என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாணத்திலிருந்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி கொழும்பு சென்று திரும்புவோரில் பலர் காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நிலையில் அவர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் தேவையற்று கொழும்பு செல்வதையோ அல்லது பொதுப்போக்குவரத்தை தேவையின்றி பயன்படுத்துவதையோ தவிர்ப்பது மீண்டுமொரு கோவிட்-19 அலையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண்டறியப்படும் கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடுத்து மருத்துவமனையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாளை உயர்மட்ட கலந்துரையாடலை மருத்துவமனை நிர்வாகம் ஒழுங்கு செய்துள்ளதாக அறிய முடிகிறது
SHARE