நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் பலி

 


நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலுவெவ ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 74 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவனப்பிட்டியவிலிருந்து பொரலுவெவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (16) இரவு வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை - கொழும்பு பழைய வீதியின் சுதவில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடுவலையில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஹங்வெல்ல நோக்கிச் சென்ற லொறியின் சாரதி நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொஸ்கம, அக்கரவிட்ட வீதியில் வசிக்கும் 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சாரதிகளின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பன்னல - நீர்கொழும்பு வீதியின் மாகந்துர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை செல்லும் வழியில் முதலாவது பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிச் சென்று கவிழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகியோர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஓட்டுனர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here