யாழ். பல்கலைக்கழகத்தில் நான்கு பேருக்குப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு..!!!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (29), சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவற்றின் படி, மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ மற்றும் குடும்ப மருத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவ நிபுணர் பி. குமரேந்திரன் சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியராகவும், வணிக முகாமைத்துவ பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.கெங்காதரன் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும், நிதி முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. லிங்கேசியா நிதி முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும், விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆர். ஶ்ரீகரன் இரசாயனவியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here