இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அந்தவகையில் யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடல் தொழிலுக்கு சென்ற நிலையில் இந்திய இழுவைப் படகுகளினால் மோதி உயிரிழந்ததாக கூறப்படும் இரண்டு மீனவர்களின் மரணத்திற்கும் நீதிகோரி மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டும், மருதங்கேணி- தாளையடி பிரதான வீதியை மறித்தும் மீனவர்கள் பாரிய கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டனர். இன்று செவ்வாய்க்கிழமை(01) காலை இப்போராட்டம் இடம்பெற்றது.
கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை கடலுக்கு சென்ற வத்திராயன் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் தணிகைமாறன் ஆகிய இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை(31) அவர்களது சடலங்கள் ஆழியவளை கடற்கரையில் கரை ஒதுங்கின.
அவர்கள் இருவரும் இந்திய இழுவைப் படகுகளினால் மோதி உயிரிழந்ததாக தெரிவித்து வடமராட்சி கிழக்கு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை(01) மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர். பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகள் செல்லாதவாறு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டதுடன், மருதங்கேணி- தாளையடி பிரதான வீதியையும் மறித்து நடுவீதியில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை சந்தித்த மருதங்கேணி பிரதேச செயலர் மேலதிகாரிகளிடம் கலந்துரையாடி தீர்வு பெற்றுத் தருவதாக தெரிவித்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த போராட்டக்காரர்கள் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரோ அமைச்சரோ இதற்கு வாக்குறுதி தந்தால் மட்டுமே இப்போராட்டத்தை நிறுத்துவதாகவும் இல்லாவிடில் இப்போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் நண்பகல் அளவில் அப்பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தார். அவர் மீனவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது தான் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் பேசி இருப்பதாகவும் நேற்றையதினம் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டமொன்றிலும் அத்துமீறும் படகுகளை பிடிக்குமாறு கடற்படையினருக்கு தான் கட்டளை பிறப்பிப்பதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக கடற்தொழில் அமைச்சர் மீனவர்களிடம் தெரிவித்தார்.
எனினும் 'இழுவைப்படகுகள் வராது. வந்தால் நானும் இங்கு வாறேன் போய் பிடிப்போம்' எனக்கூறினார்.
உயிரிழந்த மீனவர்களின் இறுதி கிரியைகளை செய்து முடிப்பதற்காக இப்போராட்டம் நண்பகல் நிறுத்திக் கொள்ளப்பட்டது.
மேலும் அவர்களது இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்றதும் கடற் தொழிற்சங்கங்களுடனும், விளையாட்டு கழகங்களுடனும் கலந்துரையாடி பெரிய அளவில் கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்படும் என கடற்தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில்
யாழ்ப்பாணம் - பலாலி, வலளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பருத்தித்துறை -பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகள் மற்றும் வலைகளை போட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.