105 வது பொன் அணிகளின் போர் நாளை ஆரம்பம்..!!!


சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 105 வது பொன் அணிகள் போர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன்
அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி நாளை(11) மற்றும் நாளை மறுதினம்(12) என இரு தினங்களில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எஸ்எல் மொபிரெலின் அனுசரணையில் நடைபெறவுள்ள இப்போட்டி தொடர்பான ஊடக மாநாடு அக்கல்லூரியில் இன்று மாலை இடம்பெற்றது.

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் 1917ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்தது. இவ்வருடம் 105வது வருட இரு நாள் போட்டியும் 29வது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி மாரச் 18ம் திகதியும் இரண்டாவது ரி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 21 இலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ளன.

கொரோனா பெரும்தொற்று காரணமாக கடந்த வருடம் இப்போட்டிகள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி ஏ.பி.திருமகன் , யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய டி.எஸ்.சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும்முயற்சியினால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டது.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 33 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றியும் முடிவடைந்தன. மிகுதிப் போட்டிகளின் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

ஒரு நாள் போட்டியில் 21 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. 2020 இல் யாழ் மாவட்டத்திலே பாடசாலைகளுக்கு இடையே முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட ரி20 கிரிக்கெட் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி பெற்றது.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு ஏ.எப்.டெஸ்வினும் யாழ்ப்பாண கல்லூரிக்கு என்.விஸ்னுகாந்தும் தலைமை தாங்குகின்றனர். இரு கல்லூரி அணிகளும் சமபலம் கொண்டவையாக காணப்படுவதினால் இக் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here