முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணி பிணக்கு ஒன்றை காரணமாக வைத்து இடுப்புக்கு கீழே இயங்காத மாற்றுத்திறனாளி மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதில் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 05.03.2022 திகதி அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வித்தியாபுரம் பகுதியில் வசிக்கும் 15 வருடமாக இடுப்புக்கு கீழே இயங்காத நிலையில் துன்பப்படும் மாற்றுத்திறனாளியான கிறிஸ்துராசா அவர்களது வீட்டுக்கு வருகை தந்த ஒரு குழுவினர் சக்கர நாற்காலியில் இருந்த குறித்த நபரை தாக்கி காலை அடித்து முறித்துள்ளனர்.
இதேவேளை, இதனை தடுக்க முற்பட்ட மனைவி மீதும் தாக்குதல் நடத்தியதில் மனைவி தலையில் காயமடைந்த நிலையில் அவருக்கு 18 இழை போடப்பட்டுள்ளது. அத்தோடு வீட்டில் இருந்த வயோதிபர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் குறித்த பாதிக்கப்பட்ட நபருக்கும் அவரது உறவினருக்கும் இடையில் இருந்த காணிப் பிணக்கு தீர்க்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் கடந்த 05.03.2022 அன்று பாதிக்கப்பட்ட நபரின் சகோதரத்தின் பிள்ளைகள் சுமார் பத்துக்கும் மேற்ப்பட்டவர்களை அழைத்து வந்து குறித்த குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது தாக்குதல் நடத்த வந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரை கைது செய்தனர். இவர்களை கடந்த 06.03.2022 அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்திய நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மாற்றுத்திறனாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் குறித்த பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
"தன்னை தாக்கிய அனைவரையும் கைது செய்யவில்லை என்றும் கைது செய்யப்பட்டவர்களும் வெளியில் வந்துள்ளார் என்று அறிகிறேன். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக தன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்றும் தன்னை கொன்ற பின் குடும்பத்தில் ஏனையவர்களையும் கொல்வோம். என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும். என்றார்.
Tags:
sri lanka news