அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு

 


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நாடு அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுவதில் இன்னமும் சிக்கல் நிலவி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, உணவுப் பொருட்களின் விலையை எவ்வாறு நிர்ணயம் செய்வது என்பது குறித்து அடுத்த வாரம் உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாண், உணவுப் பொதிகள், தேனீர் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகள் இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உணவுப் பொதி ஒன்றின் விலை 20 அல்லது 30 ரூபாவால் அதிகரிக்கப்படலாம் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்வடையக்கூடும் எனவும் எதிர்காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here