சிறுநீரக நோய் பற்றி குறிப்பிட முடியுமா?
நாட்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) சிறுநீரகத்தின் செயற்பாட்டை படிப்படியாகக் குறைக்கும். இந்த நோயின் வளர்ச்சியினால் சிறுநீரகங்கள் சாதாரணமாக செய்யும் இரத்த சுத்திகரிப்பு படிப்படியாகக் குறைக்கப்படும். நாட்பட்ட சிறுநீரக நோயின் வளர்ச்சிக்கான இரண்டு பொதுவான காரணங்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தமாகும்.
இதன் அறிகுறிகள் என்ன?
சிறுநீரக நோயின் ஆரம்ப கட்டங்களில், இது பொதுவாக எந்த குறிப்பிடத்தக்க அறிகுறிகளையும் காட்டாது. வழக்கமான இரத்த பரிசோதனைகள், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.
இருப்பினும், சிகிச்சையின்போது சிறுநீரக செயல்பாடு மோசமடைந்தால் அல்லது சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறியவில்லை என்றால், தொடர்ந்து சிறுநீர் பிரியாமை மற்றும் கணுக்கால் வீக்கம், சிறுநீரில் இரத்தம் மற்றும் அதிகரித்த தசைநார் காரணமாக மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
இந்நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
மருந்துகளுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை மாற்றங்கள் சிறுநீரக கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரக செயல்பாடு மோசமடைந்தால், அது இறுதியில் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
இதனால் சிறுநீரக சுத்திகரிப்பு அல்லது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
குறிப்பாக 50 பேரில் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக செயலிழப்பை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் இந்த நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
நாட்பட்ட சிறுநீரக நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் என்ன?
பொதுவாக, சிறுநீரகத்தின் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க குறைபாடு ஏற்பட்டாலும் மனித உடல் வெற்றிகரமாகச் செயற்படும். CKD பொதுவாக ஆரம்பக் கட்டங்களில் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் எதையும் காட்டாது. CKD இன் ஆரம்ப அறிகுறிகள் பொதுவாக தெளிவற்றவையாக இருக்கும்.
நீங்கள் குறிப்பிட்ட அறிகுறிகள் பற்றி தெளிவுபடுத்த முடியுமா?
பசியின்மை, குமட்டல், வரண்ட தோல் மற்றும் தோல் அரிப்பு, தலைவலி, உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற பொதுவான உணர்வு, சோர்வு, எதிர்பாராத அல்லது கட்டுப்பாடற்ற எடை இழப்பு போன்றனவாகும்.
ஒரு வழக்கமான இரத்த அல்லது சிறுநீர் பரிசோதனை ஆரம்ப நிலையில் ஏதேனும் ஒரு பிரச்சினையை வெளிப்படுத்தினால் அல்லது ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சை அளிக்கப்பட்டால், இந்த நோய் மேலும் தீவிரமடையாமல் தடுக்கலாம்.
தாமதமாக தொடங்கும் அறிகுறிகள் என்ன?
சிறுநீரக நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாமலோ அல்லது சிகிச்சை அளிக்கப்படாமலோ இருந்தால், சிறுநீரகநோய் தீவிரமடைந்து பின்வரும் அறிகுறிகளை உருவாக்கலாம்.
அதாவது, இரத்தத்தில் உள்ள கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் அளவுகளில் ஏற்றத்தாழ்வு மற்றும் அதனால் ஏற்படும் எலும்பு வலியால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. கைகள், கால்கள் மற்றும் கணுக்கால்களில் உணர்வின்மை அல்லது வீக்கம். உடலில் கழிவுப் பொருட்கள் தேங்குவதால் அம்மோனியா வாசனை அல்லது மீன்கழிவுகள் போன்ற துர்நாற்றம்,
பசியின்மை மற்றும் எடை இழப்பு, வாந்தி, அடிக்கடி விக்கல் வரும், அடிக்கடி சிறுநீர் கழித்தல் (குறிப்பாக இரவில்), மூச்சுத்திணறல், சோர்வு, சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம், சிந்தனை அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம், தசைப்பிடிப்பு / முதுகு வலி, எளிதான சிராய்ப்பு, அடிக்கடி தண்ணீர் குடித்தல், மாதவிடாய் இல்லாதது (அமினோரியா), தூக்கமின்மை, தோல் வெளிர் அல்லது கறுப்பு நிறமாக மாறும், பாலியல் செயலிழப்பு. CKD இன் கடைசிநிலை சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இறுதிக்கட்டமாக இதற்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். நாட்பட்ட சிறுநீரக நோயைக் குணப்படுத்த முடியாது,
சிகிச்சை மூலம் அதன் மோசமான நிலையைத் தடுக்கலாமா? இதுபற்றி நீங்கள் கூறும் அறிவுரைகள் என்ன?
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு போன்ற பிற நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ண வேண்டும், உடற்பயிற்சி மற்றும் வழக்கமான இரத்த பரிசோதனைகள் மூலம் அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வைத்தியர் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.
இரத்த அழுத்தம் 140/90 மி.மீ இற்குக் கீழ் பராமரிக்கப்பட வேண்டும். cholestrol அளவைக் குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். நாள்பட்ட சிறுநீரக நோய் இரத்த சோகைக்கு காரணம் என்பதால், இரும்புச் சத்துக்கள் பரிந்துரைக்கப்படலாம். புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
மேலும், சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். தினமும் உப்பின் அளவை 6 கிராமாக குறைக்க வேண்டும். தினமும் குறைந்தது 30 நிமிடங்களும் வாரத்தில் ஐந்து நாட்களும் உடற்பயிற்சி செய்யுங்கள். மதுபானம் அருந்துவது நல்லதல்ல. உடல் எடையை குறைத்து, உங்கள் உயரத்திற்கும் வயதுக்கும் ஏற்ற ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும். சுய மருந்து வேண்டாம்.போதுமான அளவு நீர் அருந்துதல், புரத உணவு அளவுடன் உட்கொள்ளுதல், குறைந்த சோடியம் உணவுகளை உண்ணுங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். நீச்சல் மற்றும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்தும். இருப்பினும், நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாவிட்டால், உங்கள் உடல்நலப் பாதுகாப்புக் குழுவிலிருந்து உங்களுக்கு எந்தப் பயிற்சிகள் சரியானவை என்பதைக் கண்டறியவும்.
ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். சீனி கலந்த பானங்களைத் தவிர்க்கவும். குறைந்த கலோரி உணவுகளைத் தேர்ந்தெடுத்து உப்பு மற்றும் சர்க்கரை உணவுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியமான உடல் எடையுடன் இருப்பது அவசியம். உடல் பருமன் சிறுநீரகங்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கிறது. உங்கள் உடல் எடையை பராமரிக்க பயிற்சி பெற்ற நிபுணர் மற்றும் உணவியல் நிபுணரின் உதவியை நாடலாம்.
ஒவ்வொரு இரவும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். போதுமான தூக்கம் உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சீனி அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
புகைபிடிப்பதைத் தவிர்ப்பது சிறுநீரக பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது. நீடித்த மனஅழுத்தம் பல நோய்களை ஏற்படுத்தும்.
ஆழ்ந்த இசையைக் கேட்பது, அமைதியான விடயங்கள் அல்லது செயற்பாடுகளில் கவனம் செலுத்துவது அல்லது தியானம் செய்வதன் மூலம் மனஅழுத்தத்தை சமாளிக்க முடியும். வலிமருந்து மற்றும் ஆண்டிபயோடிக் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். சிறுநீர் பகுப்பாய்வில் சிறிய அசாதாரணங்களைக் கூட புறக்கணிக்காதீர்கள். மருத்துவ ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் அல்லது அங்கீகரிக்கப்படாத ஊட்டச்சத்து மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம். எளிய வாழ்க்கை முறை மூலம் உங்கள் சிறுநீரகங்களை பாதுகாக்க முடியும். மருத்துவ ஆலோசனையின்படி வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
டாக்டர் ராஸியா நவாஸ், National Institute for Nephrology, Dialysis & Transplantation
Tags:
Medical