காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற பொலிஸார் முயற்சி : ஆர்ப்பாட்டத்திலீடுபட்டோர் இடமளிக்கவில்லை..!!!


கொழும்பு - காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷாக்களும் , அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையாகவுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்தனர்.

அத்தோடு இந்த சந்தர்ப்பத்தில் பெருமளவான கலகம் அடக்கும் படையினரும் அங்கு திடீரென குவிக்கப்பட்டனர். கூடாரங்களை அகற்றுவதற்கு பொலிஸார் தொடர்ந்தும் முயற்சித்த போதிலும் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் அதற்கு இடமளிக்கவில்லை.

பொலிஸாரின் இந்த செயற்பாடுகளால் குறித்த பகுதியில் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரின் கடும் எதிர்ப்பினையடுத்து பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.

'இவ்வாறான செயற்பாடுகளால் தாம் அஞ்சப் போவதில்லை என்றும் , துப்பாக்கிச்சூட்டை எதிர்கொள்ளவும் தயாராகவே இருக்கின்றோம்.' என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதே வேளை இன்றைய தினம் பெருந்திரளாக மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். தமது கோரிக்கையை ஏற்று அனைவரும் பதவி விலகும் வரை ஆர்ப்பாட்டத்தைக் கைவிட தயாராக இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதே வேளை அலரி மாளிகை வளாகத்தில் பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post


Put your ad code here