Saturday 21 May 2022

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துவரும் விலங்கு விசர் நீர்வெறுப்பு நோய் உயிரிழப்புகளும் – தடுப்பு நடைமுறைகளும்..!!!

SHARE

கடந்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விலங்கு விசர் நீர்வெறுப்பு நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சந்தேகத்திற்கு இடமான நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளினால் கடிகாயங்களுக்கு உட்பட்டாலோ நகக்காயங்களுக்குட்பட்டாலோ தேவையான மருத்துவ ஆலோசனைகளை அரச மருத்துவமனைகளில் பெற்றுகொள்ளாமையும், அரச மருத்துவமனைகளில் மட்டும் வழங்கப்படும் விலங்கு விசர் நீர் வெறுப்பு நோய்க்குரிய தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாமையும், அவ்வாறு பெற்றுக்கொள்ளும் தடுப்பூசிகளை ஒழுங்கான உரிய காலக்கிரமங்களில் பெற்றுக்கொள்ளாமையுமே இதற்கான முதன்மைக் காரணங்களாகும்.

மேலும் மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வின்மை விலங்கு விசர் நீர்வெறுப்பு நோய்க்குரிய தடுப்பூசிகள் தொடர்பான தெளிவின்மை மற்றும் இதற்காக பாரம்பரிய குணமாக்கல் வழிமுறைகளை நாடுதலும் இச் சடுதியான உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு காரணமாகும்.

கடந்த 5 வருடங்களில் யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள விலங்கு விசர் நீர்வெறுப்பு நோய் உயிரிழப்புகளின் விபரங்கள் பின்வருமாறு.
வருடம் உயிரிழப்புகள்
2017 00
2018 00
2019 01
2020 02
2021 06
2022 இன்று வரை 03

விலங்கு விசர் நீர்வெறுப்பு நோயானது ஒருமுறை ஏற்படின் அதனை எவ்வழிகளிலும் குணப்படுத்த முடியாது என்பதுடன் இறுதியில் இந்நோய், நோய் ஏற்பட்டவருக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும்.

தடுப்பூசிகளை ஒழுங்கான உரிய காலக்கிரமங்களில் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்நோய் ஏற்படாது தடுக்கலாம். 97 சதவீதமான விலங்கு விசர் நீர்வெறுப்பு நோயானது நாய் கடிப்பதினாலேயே ஏற்படுகின்றது.
இந்நோய் பரவாது தடுப்பதற்குரிய வழிமுறைகள் மக்களாகிய எமது கைகளிலேயே உள்ளது அவையாவன.

* வளர்ப்பு நாய்களுக்கு முதலில் பிறந்து முதல் – 04 – 06 கிழமையிலும், பின் 12 – 14 கிழமையிலும் அதன் பின்பு ஒவ்வொரு வருடமும். தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுதல் நாய்க்குரிய தடுப்பூசி அட்டையினை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்திருத்தல், நாய்களின் பெருக்கத்தினை பெண்நாய்களுக்கு கருத்தடை செய்வதன் மூலம் கட்டுப்படுத்தல் போன்ற செயற்பாடுகளினால் நாயின் பொறுப்புடைய உரிமையாளராக இருப்பதுடன் பொறுப்புடைய குடிமகனாகவும் இருக்க முடியும்.

* உரிய முறையில் நாய்க்கு தடுப்பூசி வழங்குவதால் நாய்களிடையேயும் மக்களிடையேயும் விலங்கு விசர் நீர்வெறுப்பு நோயானது பரவுவதை தவிர்க்கலாம். மேலும் செல்லப்பிராணிகளை சுதந்திரமாக வீட்டுக்கு வெளியில் அனுமதிக்காதிருப்பதனால் விலங்கு விசர் நீர்வெறுப்பு நோய் இருக்கும் ஆபத்துள்ள ஏனைய பிரணிகளுடனான தொடர்பைக்குறைத்து நோய் பரவும் ஆபத்தை குறைக்க முடியும்.

* நாய், பூனை போன்ற மிருகங்கள் கடித்தாலோ அல்லது நகங்களால் காயப்படுத்தினாலோ உடனடியாக சவர்க்காரமிட்டு 10 நிமிடங்கள் வரை தண்ணீர் ஊற்றிக் கழுவுதலே சிறந்த முதலுதவியாகும். பின்பு கட்டாயமாக அருகிலுள்ள அரச மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், மருத்துவமனைக்குச் செல்லும் போது காயம் ஏற்படுத்திய மிருகத்திற்கு தடுப்பூசி வழங்கிய அட்டை இருப்பின் அதனை எடுத்துச் சென்று மருத்துவருக்குக் காட்டுங்கள்.

* மிருகத்தை அவதானித்து வருமாறு உங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டால் அம்மிருகத்தை கூடு ஒன்றில் இட்டு அல்லது கட்டிவைத்து அது தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வாருங்கள் அல்லது அவ்வாறு அவதானிக்குமாறு அதன் உரிமையாளருக்கு அறிவுறுத்தவும்.

* மிருகத்தின் நடத்தையில் மாற்றங்கள் அல்லது நோய் அறிகுறிகள் ஏற்படுமாயின் அல்லது அம்மிருகம் உயிரிழக்குமாயின் உடனடியாக உங்கள் பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அல்லது மிருக மருத்துவருக்கு அறிவிப்பதுடன், மருத்துவ ஆலோசனையும் உடனடியாக பெற்றுக்கொள்ளுங்கள்.

* சுயமாக மருந்து எடுப்பதினையோ பாரம்பரிய வைத்தியம் செய்பவர்களையோ அணுகவேண்டாம்.

* காயங்கள் ஏற்பட்டால் வழங்கப்படும் ஏற்பூசியும் விலங்கு விசர் நீர் வெறுப்பு நோய்க்கான தடுப்பூசியும் வேறுவேறானவை. ஏற்பூசியினால் விலங்கு விசர் நீர் வெறுப்பு நோய் ஏற்படாமல் பாதுகாக்க முடியாது. விலங்கு விசர் நீர் வெறுப்பு நோய்க்கான தடுப்பூசியானது அரச மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பதுடன் அவை இலவசமாகவே வழங்கப்படும். இத் தடுப்பூசியினை உரிய தடுப்பூசி திட்ட முறைமையின் படி தவறாது பெற வேண்டும்.

உரிய காலத்தில் பெற்றுக்கொள்ளும் தடுப்பூசியானது உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கும்.

உங்கள் செல்லப்பிராணிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியானது விலங்கு விசர் நீர் வெறுப்பு நோய் பரவாது தடுக்கும்.


SHARE