![]() |
Photo- Thilina Kaluthotage |
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் நேற்று தாக்குதலில் அங்கம் வகித்த ஒரு குழுவினர் வட்டரெக்க திறந்தவெளி சிறையைச் சேர்ந்த கைதிகள் எனத் தெரிவிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக வட்டரக்க சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த சிறைக்கைதிகள் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தின் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 10 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிலிருந்து நிர்மாணப்பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட 181 கைதிகளில் 58 பேரை காணவில்லையெனவும் இவர்கள் ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அழைத்து வரப்பட்டவர்கள் இல்லை என்பதால் அவர்களை துன்புறுத்துவதை தவிர்க்குமாறும் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்முறை நிலைமையைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல்கள் இலங்கை முழுவதும் பரவ அமைதியின்மைக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் இருந்த சிலர் பொதுமக்களால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தாம் வட்டரக்க திறந்தவெளி சிறை முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகள் என அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை அலரிமாளிகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் தாம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன், இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பல நடைமுறைகளைப் பின்பற்றாமல் சிறையில் அடைக்கப்பட்டவர்களை சிறையிலிருந்து வெளியே எடுக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், வட்டரக்க சிறை அதிகாரிக்கு இது பற்றித் தெரியாது எனக் குறிப்பிடுவது மிகவும் சாத்தியமற்றது என்றும் கூறினார்.
இந்தக் கைதிகளை அழைத்து வருமாறு கண்காணிப்பாளருக்கு யார் பணிப்புரை வழங்கியது என்றும், இதற்கு முன்னரும் கண்காணிப்பாளர் இதைச் செய்தாரா என்றும் சத்குணநாதன் மேலும் அவரது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.