Saturday 28 May 2022

விக்ரம்' ஓடிடி ரிலீஸ் எப்போது?

SHARE

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு கமலை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, பகத்பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக இருக்கிறது.

இதனையொட்டி படக்குழு தீவிரமான புரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே இந்திய ரயில் பெட்டிகளில் 'விக்ரம்' படத்தின் போஸ்டர், சென்னையில் பிரமாண்டமான இசை வெளியீடு மற்றும் முன்னோட்ட விழா, கேன்ஸ் திரைப்பட விழாவில் ட்ரைய்லர் வெளியீடு, சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என படத்தின் பிரமோஷன் களைகட்டியது.

இப்பொழுது மற்ற மொழிகளிலும் படம் வெளியாக இருப்பதால் இன்று கொச்சின், அடுத்து கோலாலம்பூர் மலேசியா என படக்குழு அடுத்தடுத்து மற்ற ஊர்களுக்கும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது படத்தை ஒரிஜினல் 'விக்ரம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியான மே 29-ஆம் தேதி வெளியிட முடிவு செய்து இருந்தோம்.

ஆனால் கொரோனா மற்றும் வேறு பணிகள் காரணமாக பட வெளியீடு தள்ளிப் போய் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது. கலைஞர் பிறந்த நாளில் படம் வெளியாவது மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார். இதன் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. மேலும் ஓடிடி உரிமமும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரிடம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'விக்ரம்' திரைப்படம் படம் வெளியாகி 30 நாட்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஓடிடி தளங்களில் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திரையரங்குகளில் படம் வெளியான பின்பு இணையதளத்தில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
SHARE