Friday 27 May 2022

டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை..!!!

SHARE

பங்களாதேஷூக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி 10 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

போட்டியை பங்களாதேஷ் சமநிலையில் முடிக்க போராடிய போதிலும் அபாரமாக பந்து வீசிய அசித பெர்னாண்டோ, அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி பங்களாதேஷின் எதிர்பார்ப்பை சிதறடித்தார்.

பங்களாதேஷின் Mirpur-இல் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஐவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது.

எனினும், ஆறாம் விக்கெட்டிற்காக இணைந்த முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) மற்றும் லிட்டன் தாஸ் (Litton Das) ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி பங்களாதேஷ் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இந்த ஜோடி 6 மணித்தியாலங்களுக்கு மேல் களத்தில் நின்று 272 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

தனது மூன்றாவது சதத்தை பூர்த்திசெய்த லிட்டன் தாஸ் 141 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்களுக்கு மேல் களத்தில் நின்ற அவர், 246 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் 16 பௌண்டரிகளை பெற்றார்.

இறுதி வரை ஆட்டமிழக்காத முஷ்பிகுர் ரஹீம் 8 மணித்தியாலங்களுக்கு மேல் களத்தில் நின்று 355 பந்துகளில் 21 பௌண்டரிகளுடன் 175 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது ஒன்பதாவது டெஸ்ட் சதமாகும்.

பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் இரண்டாம் நாளில் 365 ஓட்டங்களுடன் முடிவிற்கு வந்தது. பந்துவீச்சில் கசுன் ராஜித (Kasun Rajitha) 5 விக்கெட்களையும் அசித பெர்னாண்டோ ( Asitha Fernando) 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இரண்டாம் நாள் பிற்பகலில் முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய இலங்கை அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்களுடன் அன்றைய ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

ஓஷத பெர்னாண்டோ (Oshada Fernando) 57 ஓட்டங்களையும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

மூன்றாம் நாள் பிற்பகலில் களமிறங்கிய முன்னாள் அணித்தலைவர்களான அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி நான்காம் நாளிலும் அபாரமாக பிரகாசித்து ஓட்டங்களைக் குவித்தனர். 9 மணித்தியாலங்களுக்கு மேல் களத்தில் நின்ற அஞ்சலோ மெத்தியூஸ் 13 ஆவது டெஸ்ட் சதத்தை கடந்ததுடன், 342 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 145 ஓட்டங்களை குவித்தார்.

தினேஷ் சந்திமால் 6 மணித்தியாலங்கள் வரை களத்தில் நின்றதுடன், 219 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பௌண்டரிகளுடன் 124 ஓட்டங்களைப் பெற்றார். இதன்போது அவர் தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தார்.

இலங்கை அணி நான்காம் நாளில் 506 ஓட்டங்களைக் குவித்து சகல விக்கெட்களையும் இழந்தது. இதற்கமைய, பங்களாதேஷைவிட 141 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) 5 விக்கெட்களையும் எபாடட் ஹூசைன் (Ebadot Hossain) 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 141 ஓட்டங்கள் தேவையான கட்டாயத்தில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி மிகுந்த தடுமாற்றத்துடன் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்த போது, நான்காம் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

இதன்படி ஐந்தாம் நாளான இன்று இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க கடுமையாகப் போராடியது. ஷாஹிப் அல் ஹசன் 58 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 52 ஓட்டங்களையும் பெற்று ஆறுதல் அளிக்க பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பித்தது.

ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் வௌியேற 55.3 ஓவர்களை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணியால் 169 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. அசித பெர்னாண்டோ 6 விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணி வெற்றியீட்டும் வாய்ப்பை உருவாக்கினார்.

இலங்கை அணியின் வெற்றி இலக்கு 29 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டதுடன், அதற்காக ஓவர்களும் தாராளமாக இருந்தன.
வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இலங்கை அணி 3 ஓவர்களில் வெற்றியை அடைந்தது.

ஓஷத பெர்னாண்டோ 21 ஓட்டங்களையும், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 7 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த வெற்றிக்கு அமைவாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் ஆட்டக் கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அசித பெர்னாண்டோவும், தொடரின் சிறந்த வீரராக அஞ்சலோ மெத்தியூஸூம் தெரிவாகினர்.
SHARE