மிருசுவில் பெண் மீது வாள் வெட்டு: 2 வருடங்களின் பின் ஒருவர் கைது - வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக வாக்குமூலம்..!!!


மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணத்துக்காக அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதுடையவரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலதிகமாக யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் 2 ஆண்டுகளின் பின்னர் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து அலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணம் மற்றும் அறிவுறுத்தலில் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் மற்றும் பாலாவி பகுதிகளில் 3 மாதங்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடனும் சந்தேக நபருக்கு தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here