எரிபொருளுக்கு பதிலாக 77 ஆயிரம் ரூபாவுக்கு தண்ணீரை வாங்கிய மூவர் - கிளிநொச்சியில் சம்பவம்..!!!


கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர், கள்ள சந்தையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 77 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவங்கள் கிளிநொச்சியில் கனகாம்பிகை குளம், பாரதிபுரம், மலையாளபுரம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கனகாம்பிகைகுளம் பகுதியில் 12 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்கிய நபருக்கு டீசலுக்கு பதிலாக தண்ணீர் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது,

அதேபோல் பாரதிபுரத்தில் 35 ஆயிரம் ரூபாவுக்கு டீசல் வாங்கிய நபருக்கும் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மலையாளபுரம் பகுதியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்குவதற்கு பணம் கொடுத்த நிலையில், குறித்த நபர்கள் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தினசரி கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க முயற்சித்து ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் பொதுமக்கள் இனியும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here