யாழில் அலைபேசி திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் மூவர் கைது - 15 இலட்ச ரூபாய் பெறுமதியான 45 அலைபேசிகள் மீட்பு..!!!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பேருந்துகளில் அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான 45 அலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 மாத கால பகுதியாக அலைபேசி திருட்டுக்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்த நிலையில் , அது தொடர்பில் யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் நாவற்குழி மற்றும் அரியாலை பகுதிகளை சேர்ந்த 23 , 24 மற்றும் 27 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கூறிய தகவலின் பிரகாரம் , சுமார் 3 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐ போன் உட்பட 45 அலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதேவேளை ,போதைக்கு அடிமையானதால் , தமக்கு அதிகளவான பணம் தினமும் தேவைப்பட்டதால் , திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் பேருந்துக்களில் அலைபேசியை திருடி வந்ததாகவும் பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

அலைபேசிகள் திருட்டு போயிருந்தால் , உரியவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வந்து தமது அலைபேசியை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here