சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் தீயில் எரிந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த பெண் உயிரிழக்கும் போது ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த நிலையில், தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம்பெற்ற வேளை சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவரது மரணம் சம்பவித்தது.
இந்நிலையில் இறந்த தமிழினியின் பெற்றோர் தரப்பில் கணவரான கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் சதீஸ் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, படுக்கை அறையில் மெழுகுவர்த்தி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.