ஜனாதிபதி கோட்டாபயவின் பதவி விலகல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட சற்று தாமதம் ஆகலாம் என்று தெரிகிறது.
ஜனாதிபதி மற்றும் அவரது நெருக்கமான உறவினர்கள் பாதுகாப்பாக வெளிநாடு செல்ல , முன்னர் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குழம்பியதையடுத்தே இந்த தாமதம் ஏற்படலாமென தெரிகிறது.
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு விசா வழங்குதலை உடனடியாக அமெரிக்க தூதரகம் அங்கீகரிக்கவில்லை.ஆனால் பாதுகாப்பாக அவர் வெளியேற ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. அதேபோல சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன பெசிலின் அமெரிக்க பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக தற்காலிக பாஸ்போர்ட்டை நேற்று கொழும்பிலுள்ள அமெரிக்க எம்பசி வழங்கியிருந்தது.அப்படி செய்தும் அவர்களால் வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எப்படியோ , ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளை இப்போதைய நிலையில் குடும்பத்தவர்களுக்கும் பயன்படுத்த முடியாத நிலை கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது.அதனால்தான் அரச படைகளின் விமான வசதிகளை பெற முடியாத நிலை.
கோட்டா ,பெசிலுடன் 15 பேர் இன்று மாலை ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து ஹெலியொன்றில் புறப்பட்டு ,சீ பிளேன் இலகு விமானம் ஒன்றில் டுபாய் நோக்கிச் செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் அதிலும் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கை குடிவரவு திணைக்கள அனுமதியில்லாமல் நாட்டிலிருந்து வெளியேறினால் ,பின்னர் எப்போதாவது நாட்டுக்குள் வரும்போது பெரும் பிரச்சினைகள் வரும்.
நேற்று இரவு முதல் பெசிலுக்கு எதிராக நடந்த விமான நிலைய போராட்டம் , அமெரிக்காவுக்கு அதிருப்தியை தந்துள்ளது.அமெரிக்க பிரஜை ஒருவர் நாட்டில் இருந்து வெளியேறுவதை நீதிமன்ற உத்தரவுகள் எதுவுமின்றி அப்படி தடுத்துவிட முடியாது. இதற்கெதிராக பெசில் நீதிமன்றம் கூட செல்லலாம். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்கப் பிரஜை அல்லாதவர்.அத்துடன் ஜனாதிபதி பதவி இருக்கும்போதே அவர் வெளிநாடு சென்றால்தான் உண்டு. இல்லாவிட்டால் அவருக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று அவரது தரப்பு கருதுகிறது.
ஏற்கனவே இந்தியா , அமெரிக்கா ,மாலைதீவு உட்பட்ட பல நாடுகள் ராஜபக்சமாருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்து வருகின்றன.சீனா, பாகிஸ்தான் உட்பட்ட நாடுகள் கப்சிப்.
டுபாயில் சில காலம் தங்கியிருந்து ஆபிரிக்க நாடொன்றுக்கு செல்வதற்கு கோட்டாபய தரப்பில் ஆலோசிக்கப்படுகிறது.
எப்படியோ நாளைய தினம் கோட்டாபய இராஜினாமா செய்தால் , பதில் ஜனாதிபதியாக ரணில் உடனடியாக பதவிப்பிரமாணம் செய்வார்.
சஜித் ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை வழிமொழிந்த பொன்சேகா சஜித்துக்கு எதிராக பிரசாரத்தை முன்னெடுத்து செல்கிறார்.. ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிக்காக போட்டியிட பொன்சேகாவும் தயாராகிறார்..
அரசியல் குழப்பம் தொடர்கிறது...!
- Siva Ramasamy -