Thursday 29 September 2022

யார் இந்த பொன்னியின் செல்வன்?

SHARE

பொன்னியின் செல்வன் என்பது இன்றைய இளைய தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு புதிய அறிமுகம். சற்று பிந்திய தமிழ்ச் சமூகத்துக்கு சற்று அறிமுகமான விடயம்.

தமிழினம் என்பது உலகில் நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழும் ஓர் இனம். இதற்கு காரணம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டில் வளர்ச்சியடைந்த வரலாற்றை கொண்ட, தனிச் சிறப்பு வாய்ந்த இனமான தமிழினமானது பல நாடுகளுடன் வணிகத் தொடர்பில் ஈடுபட்டது மட்டுமன்றி, பல நாடுகளை கைப்பற்றிய, ஆட்சி செய்த பெருமை மிக்க இனமாகவும் விளங்கியமையே ஆகும்.

தமிழர் தன் இனத்தின், வரலாற்றின் சிறப்பையும் திறமையையும் அறியும் போதுதான், தான் யார் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

'ஏழாம் அறிவு' படம் திரையிடப்பட்ட காலப்பகுதியில் சிங்கப்பூர், மலேசிய வாழ் மக்களிடம் “போதிதர்மர் யார்?” என்று கேட்டபோது அவர்கள் அளித்த பதில் “இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற ஓர் உத்தம புருஷர்” என்பதாகும். ஆனால், அதே கேள்வியை ஏனைய இளைய தமிழ்ச் சமூகத்தினரிடம் கேட்டபோது அவர்கள் கூறிய பதில் “தெரியாது! யார் அவர்?” என்பதாகும்.

தமிழர்கள் தம் இனத்தின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ளாமல், அவர்களது பரம்பரை மரபணுவில் உள்ள தனிச் சிறப்புக் குணங்களை வெளிக்கொண்டு வராமல் இருப்பதாலேயே இன்று உலகில் ஓர் அடிமை இனமாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஏழாம் அறிவு, இந்தியன் முதலிய திரைப்படங்களில் கையாளப்பட்ட நோக்கு வர்மம், தட்டு வர்மம், படுவர்மம், தொடுவர்மம் போன்றவை தமிழர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த வர்மக் கலைகளாகும்.

உலகுக்கே மருத்துவத்தை சொல்லிக் கொடுத்த இனம் தமிழினம். ஆகையால், தமிழினத்தின் வரலாற்றுச் சிறப்புக்களை அறிந்து, இன்று உலக வல்லரசுகளின் அடிமைகளாக இல்லாமல் அதிலிருந்து வெளிவந்து சுதந்திரத் தமிழராக செயற்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என்பதை தமிழர்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் 'பொன்னியின் செல்வன்' நாவலானது 70 வருடங்களுக்கு மேலாக மக்களின் மனதை கவர்ந்த ஒரு நாவலாக விளங்குகின்றது. அது 2022ஆம் ஆண்டு ஒரு திரைப்படமாக வெளிவந்து, தமிழர் என்றால் யார் என்பதை உணர வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

வரலாறுகள் உணர்வுகளை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்தால் மட்டுமே அவை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையும். அந்த வகையில், 'பொன்னியின் செல்வன்' என்ற வரலாற்று நாவல், பல இலட்சம் வாசகர்களின் உள்ளுணர்வைத் தூண்டிய ஒரு நாவலாகும்.

அக்காலத்தில் வாசகர்கள் வாராந்தம் 'கல்கி' என்ற சஞ்சிகையை எதிர்பார்த்து காத்திருந்தார்களோ இல்லையோ, அது சுமந்து வந்த 'பொன்னியின் செல்வன்' நாவலுக்காக காத்திருந்தமையை அறிய முடிகின்றது.

தனது கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களினதும் தனிச்சிறப்பை வெவ்வேறு கோணங்களில் செதுக்கி வெளிப்படுத்தியுள்ளார், கதாசிரியர். அவர் பல நாவல்களுக்கு சொந்தக்காரராக இருந்தாலும், 'பொன்னியின் செல்வன்' நாவலே அவரை வாசகர் மத்தியில் என்றும் அழியாப் புகழை பெற்றுக் கொடுத்தது.

யார் இந்த கல்கி?



தமிழகத்தின் சோழ சாம்ராஜ்யமாம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறைக்கு அருகமைந்த 'பட்டமங்களம்' என்ற சிற்றூரில் வாழ்ந்த ஒரு பிராமண குடும்பத்தில் 09.09.1899 அன்று இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயரை கொண்ட கல்கி பிறந்தார்.

இவர் கிருஷ்ண பக்தர் ஆகையால், பின்னாளில் தனது புனைபெயரை 'கல்கி' என புனைந்துகொண்டு செய்தியாளர், சுதந்திர போராட்ட வீரர், சங்கீத வித்துவான், இதழாசிரியர், விமர்சகர், எழுத்தாளர் என பல பரிமாணங்களில் தன்னை சமூகத்துக்கு வெளிப்படுத்திக்கொண்டவர்.

அவரது கதை கூறும் திறமை, கற்பனை வளம், நகைச்சுவை உணர்வு, தமிழ்நாட்டுப் பண்பாட்டின்பால் கொண்டிருந்த ஈடுபாடு முதலியன அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாக்கின.

எழுத்தாளர் என்ற வகையில் பல கட்டுரைகள், சுயசரிதைகள், பயணக் குறிப்புகள் முதலியவற்றை எழுதியுள்ளார். அத்தோடு ஏறத்தாழ எழுபத்தைந்து சிறுகதைகளுக்கு சொந்தக்காரர்.

'கள்வனின் காதலி', 'தியாக பூமி', 'மகுடபதி', 'அபலையின் கண்ணீர்', 'சோலைமலை இளவரசி', 'அலையோசை', 'தேவகியின் கணவன்', 'மோகினித் தீவு', 'பொய்மான் கரடு', 'புன்னைவனத்துப் புலி', 'அமரதாரா' முதலிய நாவல்களை படைத்ததோடு, 'அலையோசை' (1956) என்ற நாவலுக்காக சாகித்திய அகடமி விருதினையும் பெற்றுக்கொண்டவர்.

மேலும், சங்கீதத்தில் வித்துவத்துவம் பெற்று விளங்கியமையால் இந்திய நுண்கலைக் கழகத்தால் வழங்கப்படும் 'சங்கீத கலாசிகாமணி' விருதினையும் (1953) பெற்றுக்கொண்டார். இவரது படைப்புகளுள் மிக உன்னத படைப்புகளே 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு', 'பொன்னியின் செல்வன்' ஆகிய வரலாற்று நாவல்கள் ஆகும். இவற்றுள் வாசகர் மத்தியில் மணிமகுடம் சூடிக்கொண்டு இந்நூற்றாண்டில் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ள நாவலே 'பொன்னியின் செல்வன்'.

பொன்னியின் செல்வன் கதையின் வரலாற்றுப் பின்னணி:



'பொன்னியின் செல்வன்' நாவலானது உண்மைக் கதையை அடிப்படையாக கொண்ட ஒரு நாவல் என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ள போதும், அது சோழ பரம்பரையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனை கலந்த நாவல் என்பதே நிஜம்.

9ஆம் நூற்றாண்டில் சோழர்களின் நெற்களஞ்சியமாம் தஞ்சையை அடிப்படையாகக் கொண்டு சாம்ராஜ்ஜியம் அமைத்து, பேரரசர்களுக்கெல்லாம் பேரரசனாக ஆட்சி புரிந்தவனும், காவிரியின் மைந்தனும், கடல் கடந்து சென்று கடாரம் கொண்டவனும், கம்போடியா, சுமாத்திரா, ஜாவா, இலங்கை முதலிய நாடுகளிலெல்லாம் தனது கொடியை பறக்கவிட்டு, அந்த நாடுகள் ஒவ்வொன்றுக்கும் தனது ஒவ்வொரு பெயரை சூட்டி அழகு பார்த்தவனும், அந்தந்த நாடுகளில் தமிழை, தமிழர் பண்பாட்டினை பதிவு செய்தவனுமாகிய இராஜ இராஜ சோழனின் ஆரம்பகால வரலாற்றினை, சில கற்பனை கதாபாத்திரங்களை இணைத்துக்கொண்டு புனையப்பட்டதொரு வரலாற்று கற்பனை நாவலாகும்.

இது கல்கியால் வெளியிடப்பட்ட வாராந்த சஞ்சிகையான கல்கியில் 1950ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு, பின்னர் 1955இல் அச்சேறிய நாவலாக வெளியிடப்பட்டது.



கதைச் சுருக்கம்

காஞ்சிவாழ் இளவரசனான ஆதித்த கரிகாற்சோழன், தன் நண்பனான வந்தியத் தேவனிடம் ஒரு ஓலையை கொடுத்து, அதனை தஞ்சையை ஆட்சி செய்துகொண்டிருக்கும் தனது தந்தையான மாமன்னர் சுந்தர சோழனிடமும் சகோதரியான இளவரசி குந்தவையிடமும் சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கமைய, வந்தியத் தேவன் தஞ்சை நோக்கிச் செல்கின்றான். இடையில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையிலே ஆதித்த கரிகாற்சோழனுக்கு எதிராக பழுவேட்டரையரால் சதித்திட்டம் தீட்டப்படுவதை அறிகின்றான்.

சுந்தர சோழனின் தந்தை அரிஞ்சய சோழ தேவரின் சகோதரரான கண்டராதித்தர் ஒரு சிறந்த சிவ பக்தர். ஆதலால், அவர் அரச பதவிகளை விரும்பவில்லை. அதனால்தான் அவர் தான் அரியணை ஏறும் சந்தர்ப்பம் வந்தபோது சுந்தர சோழனை அரியணை ஏற்றினார். கண்டராதித்தரும் அவரது மனைவி செம்பியன் மாதேவியும் தங்களது வளர்ப்பு மகன் அரசனாவதை விட சிறந்த சிவபக்தனாக இருப்பதையே விரும்பினார்கள். ஆனால், மதுராந்தகன் தனது பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக அரியணை ஏற விரும்பியமையே பழுவேட்டரையர் தனது நண்பனுக்கு எதிராக இத்தகைய சதித்திட்டத்தில் ஈடுபட நேரிட்டது.

இள வயதில் சுந்தர சோழன் ஈழத்துக்குச் சென்று ஒரு போரிலே தோற்று, களைப்படைந்து இருந்த வேளை, ஒரு கரடி அவரை தாக்க வந்தபோது வாய் பேச முடியாத மந்தாகினி என்பவள் உதவி செய்து, அவனை காப்பாற்றுகின்றாள். அதன்போது அவ்விருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுவிடுகின்றது. திடீரென ஒரு நாள் சோழ நாட்டிலிருந்து வந்த காவலாளிகள் அவனிடம் அடுத்த மன்னனாக அரியணை ஏற வேண்டிய கட்டாயத்தினை வலியுறுத்த, அவன் சோழ நாடு திரும்புகின்றான். அப்பிரிவுத் துயரை தாங்க முடியாத மந்தாகினி, தானும் சோழ நாடு நோக்கி பயணிக்கின்றாள். அங்கே சுந்தர சோழனுக்கு முடிசூட்டு விழா நடைபெறுகின்றது. அதனை கண்ணுற்ற மந்தாகினி, தனது ஏழ்மை நிலை காரணமாக அரசனான சுந்தர சோழனை அடைய முடியாமையால், கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி குதித்து தற்கொலை செய்ய முயற்சிக்கின்றாள். அச்சந்தர்ப்பத்தில் அவளை காப்பாற்றிய கருத்திருமன், அவளை ஈழத்துக்கு கொண்டு செல்கின்றான். அப்பொழுது கடலிலே வீரபாண்டிய மன்னனும் நீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருப்பதை கண்ணுற்று அவனையும் காப்பாற்றி இருவரையும் படகிலேற்றி ஈழத்துக்குக் கொண்டு சென்று, ஒரு சிறிய தீவில் விட்டுவிடுகின்றான். அங்கே அவ்விருவருக்கும் ஏற்பட்ட காதல் தொடர்பின் விளைவாக, மந்தாகினி கருவுற, செம்பியன் மாதேவி அவளை அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றாள். அங்கே பிறந்த குழந்தைகளே நந்தினியும் மதுராந்தகனும்.

ஒரு நாள் மந்தாகினி இக்குழந்தைகளை விட்டு விட்டுச் சென்றுவிடுகின்றாள். அதனால் மதுராந்தகன் செம்பியன் மாதேவியால் வளர்க்கப்படுகின்றான். ஒரு கட்டத்தில் நந்தினி, தானும் தனது சகோதரனுமாகிய மதுராந்தகனும் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என அறிந்துகொள்கின்றாள்.

ஒரு நாள் ஆதித்த கரிகாலன் வீர பாண்டியனை கொலை செய்ய முயற்சிக்கின்றான். அப்பொழுது நந்தினி தனது தந்தையான வீர பாண்டியனை கொலை செய்ய வேண்டாமென கெஞ்சுகின்றாள்.

ஆனால், தனது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், தன் கண் முன்னே வீரபாண்டியனின் தலையை கொய்த தனது காதலனான ஆதித்த கரிகாற்சோழனை பழிவாங்கி, அவனது முழு சோழ வம்சத்தையும் அழித்து தான் அரியணை ஏற ஆசைப்படுகின்றாள். அது அவளது சபதமாகவும் மாறுகின்றது. தனது சபதத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒரு சதித்திட்டத்தை தீட்டி, அதனை நடைமுறைப்படுத்துகின்றாள். அதன் ஆரம்ப கட்டமாக அவள், தனது தம்பியான மதுராந்தகனின் மனதில் அரியணை ஏறும் ஆசையை தூண்டிவிடுகின்றாள். அத்தோடு தன் எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு முதியவரான பழுவேட்டரையரை திருமணம் செய்துகொண்டு அவரை தனது விருப்பத்துக்கேற்ப ஆட்டிப் படைக்கின்றாள். அவள் சோழர்களின் எதிரிகளான பாண்டியர்களால் 'அரசி' என மதிக்கப்படுபவள். அவர்களே நந்தினியின் பின்னணியிலிருந்து அவளை சோழர்களுக்கெதிராக செயற்பட தூண்டுகின்றார்கள். சோழர்களை பழி வாங்குவதற்காக அவர்கள் நந்தினியை துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றார்கள்.

தஞ்சை வந்த வந்தியத்தேவன் குந்தவையை சந்தித்து காதல் வயப்படுகின்றான். அச்சந்தர்ப்பத்தில் ஆதித்த கரிகாற்சோழனின் தம்பியாகிய அருள்மொழி வர்மன், ஈழத்தில் இருக்கின்றான்.

வந்தியத்தேவன் ஈழம் சென்று அவனை சந்தித்து பழுவேட்டரையரின் சதித்திட்டம் பற்றி எடுத்துரைக்கின்றான். அதனை கேள்வியுற்ற அருள்மொழி வர்மன், தஞ்சை திரும்புகின்றான். வழியில் அவனது கப்பல் தகர்க்கப்பட்டு, கடலில் மூழ்கி, பின்னர் உயிர் தப்பி நாகை சூடாமணி எனப்படும் பௌத்த விகாரையில் சிகிச்சை பெறுகின்றான். ஆதித்த கரிகாற்சோழனும் தஞ்சை நோக்கி பயணிக்கின்றான். ஆயினும், அவன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையிலேயே பாண்டியர்களால் கொலை செய்யப்படுகின்றான்.

இறுதியில் பொன்னியின் செல்வனான அருள்மொழி வர்மனே அரியணை ஏற வேண்டுமென அனைவரும் விரும்புகின்றார்கள். ஆயினும், அவன் சேந்தன் அமுதனே முடிசூட்ட வேண்டுமென்பதற்கான காரணங்களை எடுத்துரைத்து, மணிமுடியை அவனுக்காக தியாகம் செய்கின்றான். சேந்தன் அமுதன் என்பவன் 'உத்தம மதுராந்தக சோழ மன்னனாக' மூடி சூட்டிக்கொண்டு பூங்குழலியைத் திருமணம் செய்கின்றான்.

அருள்மொழி வர்மன் வானதியை மணமுடிக்கின்றான். வந்தியத் தேவன் குந்தவையை திருமணம் செய்கின்றான். பிற்காலத்தில் அருள்மொழி வர்மன் இராஜ இராஜ சோழன் என்ற பெயருடன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரியணையில் அமர்கின்றான்.

கதாபாத்திரங்கள்:

அருள்மொழி வர்மன் - பொன்னியின் செல்வன்

வந்தியத் தேவன் - அருள்மொழி வர்மனின் நண்பன்

குந்தவை - அருள்மொழி வர்மன் மற்றும் ஆதித்த கரிகாற்சோழனின் சகோதரி, வந்தியத் தேவனின் காதலி

ஆதித்த கரிகாற்சோழன் - சுந்தர சோழனின் மூத்த மகன்

நந்தினி - வீரபாண்டியனுக்கு மகளாகப் பிறந்தவள்.

வானதி - கொடும்பூர் இளவரசி, அருள்மொழி வர்மனின் முதல் மனைவி

ஆழ்வார்க்கடியான் நம்பி - சோழரின் வைணவ ஒற்றன்

மந்தாகினி - சுந்தர சோழனின் காதலி

பெரிய பழுவேட்டரையர் - சுந்தர சோழனின் நண்பன், மன்னருக்கு அடுத்ததாக அதிகாரம் படைத்தவர்

சின்ன பழுவேட்டரையர் - பெரிய பழுவேட்டரையரின் தம்பி, காவல் அதிகாரி

செம்பியன் மாதேவி - கண்டராதித்த சோழனின் மனைவி, உத்தம சோழனின் உண்மையான தாய், மதுராந்தகனின் வளர்ப்புத்தாய்

அநிருத்த பிரம்மராயர் - சுந்தர சோழனின் முதலமைச்சர், இராஜ இராஜ சோழனின் குரு

பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி - கொடும்பாளூர் அரசர்

சேந்தன் அமுதன் - செம்பியன் மாதேவியின் உண்மையான மகன்

பூங்குழலி - ஓடக்காரப் பெண், சேந்தன் அமுதனின் காதலி

மதுராந்தகன் - நந்தினியின் சகோதரன்

இரவிதாசன் - பாண்டிய தளபதி

கந்தமாறன் - சம்புவரையர் குலத்து இளவரசன், வந்தியத்தேவனின் நண்பன்

மணிமேகலை - சம்புவரையர் குலத்து இளவரசி, கந்தமாறனின் தங்கை, வந்தியத்தேவனை விரும்பியவள்

பார்த்திபேந்திரன் - பல்லவ குலத்தவன், ஆதித்த கரிகாற்சோழனின் நண்பன்

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை பின்வரும் வரைபடம் மூலம் மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் சிக்காகோ தமிழ்ச் சங்க மணி குணசேகரன்.




நாவலின் கட்டமைப்பு

பாகம் தலைப்பு அத்தியாயங்கள்

1 புது வெள்ளம் 57

2 சுழல் காற்று 53

3 கொலை வாள் 46

4 மணிமகுடம் 46

5 தியாக சிகரம் 91

சித்திரங்கள்

பொன்னியின் செல்வன் நாவலின் வெற்றிக்கு அந்நாவலில் இடம்பெற்ற சித்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. நாவல் முதல் முறையாக வெளிவந்த போது கல்கியின் நண்பரான மணியம் சித்திரங்களை வரைந்தார். அவர் இந்திய சுவரோவிய முறையின் அழகியலை பின்பற்றியே பொன்னியின் செல்வன் நாவலுக்கு தனது சித்திரங்களை வரைந்தார்.



வந்தியத்தேவனும் குந்தவையும் - மணியம் ஓவியம்



கல்கி நாவலில் சித்திரம் வரைந்தவர்களின் பட்டியல்

1950 - 1954 - மணியம்

1968 - 1972 - வினு

1978 - 1982 - மணியம்

1998 - 2002 - பத்மவாசன்

2014 முதல் வேதா

பொன்னியின் செல்வன் நாவலின் பிற வடிவங்கள்

சித்திர நாவல்

1. Sixth Sense பதிப்பகம் 2017இல் 1200 வண்ண மயமான சித்திரங்களுடன் சித்திர நாவலாக வெளியிட்டது.

2. ஓவியர் தங்கம் 1050 சித்திரங்களுடன் கூடிய 10 தொகுதிகளாக வெளியிட்டார்.

நாவல்

Magic Lantern குழுவில் பிரவீன், குமாரவேல் ஆகியோரால் நாடகமாக ஆக்கப்பட்டது.

மொழிபெயர்ப்புகள்

பொன்னியின் செல்வன் நாவலை இந்திரா நீலமேகம், சி.வி.கார்த்திக் நாராயணன், பவித்ரா ஸ்ரீனிவாசன், ரெங்கசாமி முதலியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள்.

திரைப்படம்

இயக்குநர் மணிரத்னம் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ரகுமான், விஜயகுமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற மிகப் பெரியதொரு நட்சத்திரப் பட்டாளத்தை இணைத்து உருவாக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், 30.09.2022 (நாளை) பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இலக்கியங்கள்

1. விக்ரமன் - நந்திபுரத்து நாயகி (நாவல்)

2. பாலகுமாரன் - உடையார் (நாவல்)

3. எல்.கைலாசம் - மலர்ச்சோலை மங்கை (நாவல்)

4. சாண்டில்யன் - மன்னன் மகள் (நாவல்)

5. அனுஷா வெங்கடேஷ் - காவிரி மைந்தன் (நாவல்)

6. அரு.இராமநாதன் - ராஜராஜ சோழன் (நாடகம்)


- கலாநிதி கலா சந்திரமோகன்,
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.


SHARE