யாழ்ப்பாணம் - கொக்குவில், பிரம்படி ஒழுங்கைப் பகுதியில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் அரக்கத் தனமாகக் கொல்லப்பட்ட பொதுமக்களின் 35 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று காலை ஆடியபாதம் வீதி - பிரம்படி ஒழுங்கைப் பகுதியில் கொல்லப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியடியில் இடம்பெற்றது.
அந்தப் பகுதியில் வதியும் கொல்லப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உறவுகளை அஞ்சலித்தனர். கொல்லப்பட்டவர்களின் ஞாபகார்த்மாகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி அதிகாலை, இந்திய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட “ஒப்பரேசன் பவான்” என்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பிரம்படி ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடுகளினுள் வலிந்து உள்நுழைந்த இந்தியப் படையினர் தூங்கிக் கொண்டிருந்தவர்களை இழுத்துச் சென்று வீதிகளில் வைத்து சுட்டும், வெட்டியும் படுகொலை செய்திருந்தனர். இதன் போது சுமார் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்தியப் படையினரின் இந்த வெறியாட்டத்தின் போது தப்பிப் பிழைத்த ஓரு சிலர் இன்னமும் சாட்சிகளாக அந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்படத்தக்கதாகும்.
.jpg)
.jpg)
.jpg)