வரித் திருத்தம் தொடர்பில் தௌிவூட்டிய ஜனாதிபதி..!!!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரித் திருத்தம் தொடர்பில் இன்று (19) விசேட உரை நிகழ்த்தினார்.

கடந்த இரண்டு வருடங்களில் 2300 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதன் காரணமாக பணவீக்கம் 75 வீதமாக அதிகரித்துள்ளதாக அவர் தனது உரையில் தெரிவித்தார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வருமானத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அதற்காகவே புதிய வரித்திருத்தம் முன்வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஏற்றுமதித் துறைக்கும் வரி விதிக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்ததாகவும் பெருந்தோட்டத்துறையே நாட்டின் முதலாவது ஏற்றுமதி கைத்தொழில் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையின் போது நினைவுகூர்ந்தார்.

பிரித்தானிய காலத்தில் தேயிலை, இறப்பர், தேங்காய் உள்ளிட்ட அனைத்திற்கும் வரி செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த இலக்கை அடைய வரி செலுத்தல் அவசியம் என தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தனிப்பட்ட வரி செலுத்தல் தொடர்பில் ஆராய்ந்த போது, இரண்டு இலட்சம் வருமானம் பெறுவோரிடம் அறவிடுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியமும் திறைசேரியும் கலந்துரையாடிய போதும், அதன் மூலம் எவ்வித நோக்கமும் நிறைவேறாத காரணத்தால், ஒரு இலட்சம் வருமானம் பெறுவோரிடம் வரி அறவிட தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு செய்யாவிட்டால் 2026 ஆம் ஆண்டாகும் போது மொத்த தேசிய உற்பத்தியை 14.5 அல்லது 15 வீதமாக மாற்ற முடியாமல் போகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதில் இருந்து விடுபட்டால் IMF உதவிகள் கிடைக்காது எனவும் IMF சான்றிதழ் கிடைக்காவிட்டால் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளில் இருந்து ஒத்துழைப்புகள் கிடைக்காமல் போகும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தௌிவுபடுத்தினார்.
Previous Post Next Post


Put your ad code here