கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்டத்தின் பண்பாட்டு பெருவிழா கிளிநகர பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழர் வரலாற்று வாழ்வியல் விழுமியங்களை கண் முன்பே வெளிப்படுத்தும் பொம்மலாட்டம், வீரப்பறை, சிலம்பம், காவடி, கரகம், தமிழ் மன்னர்களின் பிரதி உருவச்சிலை பவனி , தவில் நாதஸ்வரம், பாரம்பரிய இன்னிய வரவேற்புகளுடன் ஆரம்பமாகியது.
A9 வீதியூடாக நகர்ந்த பண்பாட்டுப்பவனி கிளிநொச்சி பசுமைப்பூங்காவை சென்றடைந்ததும் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின.
இசை அமுத கானங்கள், மட்டக்களப்பு இராவணேசன் கூத்துருவ அளிக்கை,தேசிய விருது வென்ற மண்குளித்து நாடக ஆற்றுகை - பாகம் 02", யாழ் குமரன் குழுவினரின் "நாதஸ்வர சங்கமம்", கவியரங்கம், மலையக மண் வாசனை தாங்கிய காமன் கூத்து அளிக்கை, நடன ஆற்றுகை" என்பனவற்றுடன் கிளிநொச்சி மண்ணிற்கு மகத்தான பணியாற்றிய சேவையாளர்கள் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
தமிழர் பண்பாட்டுத்தொன்மை, கலை, கலாச்சாரம், பண்பாட்டடையாளம், வீரம், பாரம்பரியம், வீரவிளையாட்டு, ஆடல், பாடல், கிராமியக்கூத்து, நாட்டியம் என்பனவற்றை பறைசாற்றும் பண்பாட்டுத் திருவிழாவாக இது அமைந்துள்ளது.
சமூகப்பிறழ்வுகள், போதைப்பொருள் பாவனை , சிறுவர் துஸ்பிரயோகங்கள் நிறைந்துள்ள தற்போதைய காலத்தில் இவ்வாறான பெருவிழாக்கள் மனரீதியாக தூய மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.