Friday 18 November 2022

நாங்களும் மனிதர்கள் எங்கள் உரிமைகளை அங்கீகரியுங்கள் திருநர்கள் கோரிக்கை..!!!

SHARE

உலக வன்மத்தினால் கொல்லப்பட்ட திருநர்களை ( திருநங்கைகள், திருநம்பிகள்) நினைவுகூறும் திருநர் நினைவுதினம் (Voice of edge -) விளிம்பின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் அறிமுக நிகழ்வோடு இன்று (18.11.2022) மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் ஜொனிசா தலைமையில் நினைவேந்தப்பட்டது.

இந்நிகழ்வில் திருநர்கள் பலரும் தம் எண்ணக் கருத்துக்களை முன்வைத்து பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் தெரிவிக்கையில் நாங்கள் எங்களுக்கு சொத்து தரச்சொல்லியோ பணம் பொருள் தரச்சொல்லியோ கேட்கவில்லை எம்மையும் மனிதர்களாக மதியுங்கள் எங்கள் உணர்வுகளையும் புரிந்துகொள்ளுங்கள் எங்கள் உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்று தான் கேட்கின்றோம். எங்களுக்கு வீடுகளிலும் ஆதரவு இல்லை சமூகத்திலும் ஆதரவு இல்லை. எங்களை வேற்றுக் கிரக வாசிகளாக பார்க்காதீர்கள். உழைப்புக்கு போனால் வேலை தர தயங்குகின்றனர் இருப்பிடத்திற்கு வீடு தர பயப்படுகின்றனர். நாம் பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற எண்ணப்பாட்டில் சமூகத்தில் நினைக்கின்றனர்.நாங்கள் அப்படியானவர்கள் அல்ல. எங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதால் சிலர் தற்கொலை செய்யும் நிலைகள் கூட ஏற்பட்டுள்ளது. எனவே எம்மை அங்கீகரிப்பதும் எமக்கான உரிமைகளை மதிப்பதும் இந்த சமூகத்தின் கடமை. எனவே நாம் வாழும் எம் உரிமைகளை எமக்குத் தாருங்கள் என. கருத்தாடல்களை கோரிக்கையாக முன்வைத்தனர்.

இந்நிகழ்வில் திருநர்கள் தம் வாழ்க்கையைக் கூறும் எங்கள் குரல்கள் உங்கள் காதுகளில் ஒலிக்காதா? எனும் ஆவணப்படமும் நாடக ஆக்கமும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நண்பர்கள், ஆதரவாளர்கள், ஊடகங்கள், சக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் பங்கு பற்றினார்கள். மிகச் சரியாக குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வு எந்த அல்லோலமும் இன்றி மிக எளிமையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் வன்முறைகளால் மரணமான திருநர்கைளுக்காக விளக்கேற்றி நினைவு கூரப்பட்டமையும் குறிப்படித்தக்கது.

யாழ்.தர்மினி.














SHARE