Friday 16 December 2022

புகைபிடிப்பதை முழுமையாக தடை செய்ய தீர்மானம்..!!!

SHARE

வருங்கால சந்ததியினருக்கு புகைபிடிப்பதை படிப்படியாக குறைக்க நியூசிலாந்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்தின்படி அடுத்த வருடம் முதல் நாட்டில் புகைப்பிடிப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் புகைபிடிப்பதை முற்றிலுமாக தடை செய்வதே இறுதி இலக்கு. யார் சிகரெட் வாங்கலாம் என்பதில் சில கட்டுப்பாடுகளை விதித்து இந்த சட்டம் அமுல்படுத்தப்படும்.

அதன்படி, அடுத்த ஆண்டு 14 வயதுக்குட்பட்டவர்கள் சிகரெட் வாங்க தடை விதிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த வயது வரம்பு உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக இதுபோன்ற சட்டத்தை கொண்டு வந்த நாடு நியூசிலாந்து என்று கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ முடியும் என உதவி சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரல் தெரிவித்துள்ளார். மேலும் புகைபிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்கள் குறைவதால் சுகாதார அமைப்பால் நிறைய பணம் சேமிக்கப்படும் என்றார். இதன் மூலம் சுகாதார துறைக்கான செலவினங்களை சுமார் 5 பில்லியன் நியூசிலாந்து டொலர்கள் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட் வாங்கக் கூடியவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு மேலதிகமாக மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டில் இருக்கக்கூடிய நிகோடின் அளவைக் குறைக்கவும் சட்டங்கள் போடப்பட்டுள்ளன. நிகோடின் சிகரெட்டுக்கு அடிமையாவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

மேலும் எதிர்காலத்தில், சிறப்பு கடைகளில் மட்டுமே இவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். வழக்கமான கடைகளில் அவற்றை வாங்க முடியாது.

சிகரெட் விற்கும் கடைகளின் எண்ணிக்கை சுமார் 6,000 என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இது 600 ஆக குறைக்கப்படும்.

ஏற்கனவே நியூசிலாந்தில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. வயது வந்தோரில் 8 சதவீதம் பேர் மட்டுமே தினமும் புகைபிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது 9.4 சதவீதமாக இருந்தது.

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டங்களின் காரணமாக, 2025ஆம் ஆண்டுக்குள் இந்த சதவீதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டங்களுக்கு எதிரான கட்சிகளும் உள்ளன.

இதன் காரணமாக சிகரெட்டுகளுக்கு கறுப்புச் சந்தை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாராளுமன்றத்தில் சில தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
SHARE