Saturday 4 February 2023

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு; கரிநாளாக பிரகடனம்..!!!

SHARE

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சியினை வழங்குமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து இன்று பாரிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பேரணி ஆரம்பமாகி பல்கலைக்கழக நுழைவாயிலை சென்றடைந்த போது, பொலிஸாரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், பொலிஸாரின் தடையையும் மீறி பேரணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

காங்கேசன்துறை வீதியூடாக யாழ். முற்ற வெளியை அடைந்த பேரணி அங்கிருந்து கிளிநொச்சிக்கான பயணத்தை ஆரம்பித்தது.

இன்று ஆரம்பமான இந்த பேரணி எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பை சென்றடையவுள்ளது.

இதனிடையே, இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் 'தமிழருக்கு இருள் நாள்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் காந்திய அடிப்படையில் அஹிம்சையாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து கட்சி உறுப்பினர்கள் வெள்ளைத் தொப்பிகளை அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கட்சியின் உறுப்பினர்களால் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பேரணியாக கல்லடி பாலத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.








SHARE