உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிப்பு?


உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படவுள்ளதுடன், தற்போது உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிப்போரில், கட்சித் தாவல் உட்பட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களை உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு கட்சிச் செயலாளர்களுக்கு அதிகாரமளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி சபைகளினதும் நீடிக்கப்பட்ட பதவிக் காலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதனை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பது தொடர்பில் அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கென விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் ஆராய்ந்து, அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் இம்மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கு அரச உயர்மட்டம் திட்டமிடடிருப்பதாக நம்பகரமாக அறியக் கிடைத்தது.

இந்தத் தீர்மானத்தின் படி, உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை இன்னும் ஒருவருடத்துக்கு அதாவது எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கோரப்படவுள்ளது என்றும், உள்­ளூ­ராட்­சி­ சபைகள் தேர்தல் சட்­டத்தின் 10ஆம் சரத்தின் பிர­காரம் எந்­த­வொரு கட்­சியின் செய­லா­ள­ரினால், தங்­களின் கட்­சி­ சார்பில் தெரி­வு­ செய்­யப்­பட்­டி­ருந்த உறுப்­பினர் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நிறுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவிப்பதன் மூலம் அதனை மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் குறித்த உறுப்பினர் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கும் முன்மொழியப்பட்டிருக்கிறது என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Previous Post Next Post


Put your ad code here