Thursday 9 March 2023

வடக்கின் போர் ஆரம்பம்..!!!

SHARE

யாழ் மத்தியக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் 116வது வடக்கின் பெரும் சமரின் முதல் நாள் ஆட்டத்தில் நிசாந்தன் அஜய் மற்றும் ஜெகதீஷ்வரன் விதுசன் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் மத்தியக் கல்லூரி வலுவான நிலையை அடைந்துள்ளது.

இலங்கை பாடசாலை பெரும் சமர் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பெரும் சமரில் ஒன்றான வடக்கின் பெரும் சமர் இன்று வியாழக்கிழமை (9) ஆரம்பித்தது.

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ். மத்தியக் கல்லூரிகளுக்கு இடையிலான 116வது வடக்கின் பெரும் சமரின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மத்தியக் கல்லூரி அணிக்கு ஜெகதீஷ்வரன் விதுசன் மற்றும் சதாகரன் சிமில்டன் ஆகியோர் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பும் முனைப்பில் களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 27 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், யோகதாஸ் விதுசனின் பந்துவீச்சில் சிமில்டன் 7 ஓட்டங்களுடன் மஹேந்திரன் கிந்துஷனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட் குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதும் விதுசன் மற்றும் மதீஷ்வரன் சன்சஜன் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்ப ஆரம்பித்தனர். யோகதாஸ் விதுசனின் பந்துவீச்சில் 2 சிக்ஸர்களை பெற்றுக்கொண்ட ஜெகதீஷ்வரன் விதுசன் ஓட்டக்குவிப்பினை சற்று வேகப்படுத்தினார்.

இவ்வாறான நிலையில் மதியபோசன இடைவேளையின் போது விதுசன் 78 பந்துகளில் 43 ஓட்டங்களையும், மறுபக்கம் சன்சஜன் 46 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள மத்தியக் கல்லூரி அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 90 ஓட்டங்களை (26 ஓவர்கள்) பெற்றுக்கொண்டது.

மதியபோசன இடைவேளைக்கு பின்னர் விதுசன் மற்றும் சன்சஜன் ஆகியோர் நிதானமாக ஓட்டங்களை குவித்ததுடன், விதுசன் தன்னுடைய அரைச்சதத்தையும் கடந்தார். எனினும் மதியபோசன இடைவேளைக்கு பின்னர் இருவரும் 30 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, அண்டன் அபிசேக்கின் பந்துவீச்சில் 71 ஓட்டங்களை பெற்றிருந்த விதுசன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய போல் பரமதயாளன் வந்தவேகத்தில் ஆட்டமிழக்க, சன்சஜன் 42 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். சன்சஜனின் ஆட்டமிழப்பை தொடர்ந்து சிறந்த ஓட்டக்குவிப்புடன் துடுப்பெடுத்தாடிவந்த மத்தியக் கல்லூரி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது.

அணித்தலைவர் ஆனந்தன் கஜன், அனுபவ வீரர் ரஞ்சித்குமார் நியூற்றன் என முன்னணி வீரர்கள் ஆட்டமிழக்க, தேநீர் இடைவேளையின்போது மத்தியக் கல்லூரி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் நிசாந்தன் அஜய் தனியாளாக நின்று ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இரண்டு விக்கெட்டுகள் மாத்திரம் மீதமிருந்த நிலையில் தேநீர் இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய மத்தியக் கல்லூரிக்கு நிசாந்தன் அஜய் அபாரமான இன்னிங்ஸ் ஒன்றை ஆடி அணியை மீட்கத்தொடங்கினார். இவருடன் பின்வரிசையில் களமிறங்கிய சுதர்சன் அனுசாந்த் சிறந்த துடுப்பாட்ட பங்களிப்பை வழங்க ஆரம்பித்தார்.

சென் ஜோன்ஸ் கல்லூரியின் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட அஜய் வேகமாக ஓட்டங்களை அடித்தாடினார். விதுசனின் ஓட்ட எண்ணிக்கையை கடந்து வெறும் 76 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களை குவித்த இவர், யோகதாஸ் விதுசனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அஜய் ஆட்டமிழந்தபோதும் 208 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்த அணியை 274 ஓட்டங்களுக்கு அழைத்துச்சென்றிருந்தார். இவரின் ஆட்டமிழப்பைத்தொடர்ந்து அதுவரை நேரமும் துடுப்பாட்டத்துக்கு பங்களிப்பு வழங்கிவந்த அனுசாந்த் 27 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்து வெளியேறினார். எனவே 66.2 ஓவர்கள் நிறைவில் தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை யாழ். மத்தியக் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி ஆரம்பம் முதல் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

அணியின் முக்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அண்டர்சன் சச்சின் கணபதி 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறியதுடன், மகேந்திரன் கிந்துசன் (ஓட்டங்கள்) மற்றும் கமலபாலன் ஜனாதன் (ஓட்டங்களின்றி) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனைத்தொடர்ந்து சென் ஜோன்ஸ் அணிக்காக எபனீசர் ஜெசில் 16 ஓட்டங்களையும், அணித்தலைவர் கமலபாலன் சபேசன் 9 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து ஆட்டநேர இறுதிவரை களத்தில் நிற்க 17 ஓவர்களில் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சென் ஜோன்ஸ் கல்லூரி இழந்துள்ளது. பந்தவீச்சில் அனுசாந்த் 2 விக்கெட்டுகளையும், நியூற்றன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளனர்.

இதேவேளை சென் ஜோன்ஸ் கல்லூரி அணியானது, மத்தியக் கல்லூரியை விட முதல் இன்னிங்ஸில் 236 ஓட்டங்கள் பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

யாழ். மத்தியக் கல்லூரி – 279/10 (66.2), அஜய் 74, விதுசன் 71, விதுசன் 70/4, அபிசேக் 67/3
யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி – 43/3 (17), எபனேஷர் 16*, கிந்துசன் 11, அனுசாந்த் 26/2
முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி 236 ஓட்டங்களால் முன்னிலை


படங்கள்: ஐ.சிவசாந்தன்


































SHARE