ஜன்ம குருவாக அமர்ந்து எங்கு சென்றாலும் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் தானே மிஞ்சியது. இப்படிப் பலவகையிலும் உங்களை அலைக்கழித்த குருபகவான் 22.4.2023 முதல் 1.5.2024 வரை உங்கள் ராசிக்கு தனவீடான 2-ம் வீட்டில் அமர்வதால் அடிமனசில் இருந்த போராட்டம் நீங்கும்.
எங்கும் எதிலும் முதலிடத்தை பிடிக்க நினைக்கும் மீன ராசி அன்பர்களே... காலம் கனியும்வரை காத்திருப்பவர்கள் நீங்கள். வேதாந்தம், சித்தாந்தம் பேசும் நீங்கள், தனக்கெனப் பிரச்னை வந்தால் தடுமாறுவீர்கள். எதிர்ப்புகளுக்கு அஞ்சாத நீங்கள், போட்டியென வந்துவிட்டால் பொங்கி எழுவீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜன்ம குருவாக அமர்ந்து உங்களுக்கு வார்த்தைகளால் வடிக்கமுடியாத அளவிற்கு ஏகப்பட்ட மன உளைச்சலையும், டென்ஷனையும் தந்து, எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே... எங்கு சென்றாலும் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் தானே மிஞ்சியது. இப்படிப் பலவகையிலும் உங்களை அலைக்கழித்த குருபகவான் 22.4.2023 முதல் 1.5.2024 வரை உங்கள் ராசிக்கு தனவீடான 2-ம் வீட்டில் அமர்வதால் அடிமனசில் இருந்த போராட்டம் நீங்கும்.
வீட்டில் பேச ஆரம்பித்தாலே பிரச்னைகள் வெடித்ததே... இனி இதமாகப் பேசி சாதித்துக் காட்டுவீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்து அலைக்கழித்ததே... இனி எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதியுண்டாகும். தட்டில் சாப்பாடு இருந்தும் நிம்மதியாக சாப்பிடமுடியாமல் தவித்தீர்களே... நிம்மதியாக சாப்பிடுவீர்கள். சந்தேகத்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
உறவினர்கள் தேடி வருவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சோர்ந்த முகம் மலரும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். அநாவசியமாகப் பேசி நல்ல நண்பர்களையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் உரசல் போக்கு, மனஸ்தாபங்கள் இருந்ததே, அவையாவும் நீங்கி, பாசமாகப் பேசுவார்கள். பெரிய நோயெல்லாம் இருப்பது போல பயந்தீர்களே... மருத்துவச் செலவுகளும் அதிகமானதே... இனி ஆரோக்கியம் பற்றிய பயம் நீங்கும்.
குருபகவானின் பார்வைப் பலன்கள்
குரு பகவான் ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பிரபலங்கள் நண்பராவார்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமுண்டு. கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும்.
உங்களது எட்டாவது வீட்டை குரு பார்ப்பதால் எதிர்பாராத வகையில் பணம் வரும். பழைய சொந்தங்கள் தேடி வரும். திட்டமிட்டபடி அயல்நாடுப் பயணங்கள் கூடி வரும். விசா பெறுவதில் தடையிருக்காது. குலதெய்வ கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
குருபகவான் உங்களது பத்தாவது வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் அதிக நாட்டம் பிறக்கும். வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அண்டை அயலாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அவர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து பலன்கொடுக்க இருக்கும் இந்தக் காலக்கட்டங்களில் உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாருடன், உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உயர்கல்வியில் தேர்ச்சி உண்டு. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள்.
17.4.2023 முதல் 1.5.2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த நாள்களில் செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
11.9.2023 முதல் 20.12.2023 வரையிலான நாள்களில் குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். திருமணம் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும்
வியாபாரம் : தொடர் தோல்விகளையும், இழப்புகளைச் சந்தித்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைப்பட்டீர்களே... இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே... இனி தொலைநோக்குச் சிந்தனையால் லாபம் கூடும். அவசரப்பட்டுப் பெரிய முதலீடுகளால் கையை சுட்டுக் கொண்டீர்களே... கொடுக்கல்-வாங்கலில் பிரச்னைகள் வெடித்ததே... அந்த அவலநிலையெல்லாம் மாறும். தேங்கிக் கிடந்த சரக்குகளைப் புதிய சலுகைகளை அறிவித்து விற்றுத் தீர்ப்பீர்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நட்டப்படாமல், சந்தை நிலவரத்தை உற்று நோக்கி புது முதலீடு செய்யுங்கள். லாபம் கணிசமாக உயரும். அடிக்கடி விடுமுறையில் சென்று வேலையாட்கள் உங்களை நிலை குலைய வைத்தார்களே... இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரர்ககளை நீக்குவீர்கள். புதிய பங்குதாரர்கள் சேருவார்கள். அரசுக் கெடுபிடிகள் தளரும். மே, ஜூன், ஆகஸ்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். ஹோட்டல், கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், பைனான்ஸ், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் தேடி வரும் வாய்ப்புள்ளது.
வேலை : மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வந்ததே... இரவு பகலாக உழைத்தும் பலனில்லையே... வேறு சிலருக்குத்தான் பதவி உயர்வு கிட்டியதே... இனி அந்த நிலை மாறும். இழந்த சலுகைகளைக் கேட்டுப் பெறுவீர்கள். உங்கள் திறமையை அறிந்துகொண்ட மேலதிகாரி பதவியுயர்வு, சம்பள உயர்வு தருவார். வேலை நிரந்தரமாகும். சகஊழியர்கள் உங்களை ஏளனப்படுத்திப் பேசினார்களே! இனி உங்களை மதிப்பார்கள். ஜூன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேறு சில வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள். சம்பளம் உயரும். அதிகாரியின் உதவியால் அலுவலக முக்கியப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி மாற்றம் பழைய சிக்கல்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் மாறுபட்ட அணுகுமுறையால் எதையும் சாதித்துக் காட்டும் வல்லமையை அள்ளித் தரும்.
பரிகாரம்: புதுக்கோட்டையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேங்கைவாசல். இங்குள்ள வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை சுண்டல் சமர்ப்பித்து வழிபடுங்கள்; குரு பலம் உண்டாகும்.
Tags:
Rasi Palan