யாழில் காசுக்காக சிறுவர்களை தப்பிக்க வைக்கும் காவலாளி..!!!


யாழ்ப்பாணம் , அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலை சிறுவர்களை, பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், வெளி மாகாணங்களைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுச் சிறுவர்கள், நன்னடத்தைப் பாடசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில், அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்றைய தினமே வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அச்சுவேலிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டனர்.

அதன் போது, அச்சுவேலிப் பொலிஸாரால் சிறுவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், நன்னடத்தைப் பாடசாலையின் காவலாளிக்கு தமது பெற்றோர் பணத்தை வைப்பிலிட்டதாகவும் அவரே தப்பிக்க உதவியதாகவும் தெரிவித்த சிறுவர்கள், காவலாளி வெளியிலிருந்து சட்டவிரோதமாக பொருள்களைக் கொண்டு வந்து தருவார் எனசிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளியை பாடசாலை நிர்வாகம் பணி இடைநிறுத்தியுள்ளது.

இருந்த போதிலும் இதுவரையில், பொலிஸார் அவரைக் கைது செய்யவோ , அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது.



Previous Post Next Post


Put your ad code here