வவுனியாவில் பயங்கரம்! வீடு புகுந்து வாள்வெட்டு: 21 வயதான இளம் குடும்ப பெண் எரித்துக்கொலை..!!!


வவுனியா - தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை குறித்த வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டின் உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த நபர் காயமடைந்துள்ளார்.

அதன் பின்னர், குறித்த குழுவினர் வீட்டுக்குள்ளிருந்த பெண்கள் உட்பட பலரை தாக்கியதோடு, வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, உயிரிழந்த பெண்ணின் கணவர், சிறுவர்கள், ஏனைய பெண்கள் உட்பட 9 பேர் வெட்டுக்காயங்கள் மற்றும் எரிகாயங்களுக்குள்ளாகி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் வீட்டின் முன்பாக இனந்தெரியாத நபர்கள் நடமாடித் திரிவதை வீட்டின் உரிமையாளர் அவதானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த வீட்டில் வசிக்கும் சிறுமி ஒருவருக்கு இன்று அதிகாலை பிறந்தநாள் நிகழ்வொன்றும் சிறியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அப்பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதே இந்த தாக்குதல் மற்றும் உயிரிழப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here