பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
கண்டி - கலஹா, தெல்தோட்டை, லிற்றில் வெலி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (11) மாலை நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணமற்போன லிற்றில் வெலி புதிய வீட்டுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிறுவனின் சடலம் பொது மக்களால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
10 வயதான காந்தீபன் திவான் எனும் சிறுவன் லிற்றில் வெலி ஓடை நீரில் நேற்று மாலை அடித்துச்செல்லப்பட்டார்.
லிற்றில் வெலி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 5-இல் கல்வி கற்கும் காந்தீபன் திவான், பாடசாலையில் மேலதிக வகுப்பினை முடித்து விட்டு வீடு திரும்பிய வேளை, லிற்றில் வெலி ஓடை பாலத்தைக் கடக்கும் போது நீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
இதனையடுத்து, கிராம மக்கள் இணைந்து தேடுதல் நடகடிக்கையை முன்னெடுத்தனர். சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் பேராதனை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
sri lanka news
