பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்..!!!


VAT-ஐ அதிகரிக்கவும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், உலக வங்கி தனது புதிய அறிக்கையில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையினால் உலக சந்தையில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 90 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கக்கூடும்.

உலக வங்கியின் வர்த்தக பொருட்கள் மற்றும் சந்தைகளின் புதிய அறிக்கையின் பிரகாரம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல்கள் ஆரம்பித்த தினம் முதல் இதுவரை மசகு எண்ணெயின் விலை 06 வீதத்தால் அதிகரித்துள்ளது.

மசகு எண்ணெயின் விலை மேலும் கடுமையாக பாதிக்கப்படுமாயின், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் உணவுக்கான பணவீக்கம் அதிகரிக்கும் என உலக வங்கியின் பிரதி தலைமை ஆய்வாளரை மேற்கோள் காட்டி குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பணவீக்கம் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு மற்றும் உர ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள சில நாடுகள் அதன் கட்டுப்பாடுகளை நிறுத்தாவிடின், உலகளாவிய ரீதியில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்து மற்றொரு நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது
Previous Post Next Post


Put your ad code here