புலிகளின் சின்னம் பொறித்த ரி. சேர்ட் அணிந்த யாழ். இளைஞன் - பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்..!!!


யாழில். விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ரி - சேர்ட் அணிந்த இளைஞனை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் கொடிகாமத்தை சேர்ந்த 27 வயது இளைஞன் புலிகளின் சின்னம் மற்றும் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ரி - சேர்ட் அணிந்தவாறு நிகழ்வில் கலந்து கொண்டார்.

அது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த இராணுவ புலனாய்வு பிரிவினர் , இளைஞனை கைது செய்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொடிகாம பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , இன்றைய தினம் புதன்கிழமை, பயங்கரவாத தடை சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு ஒழுங்கு விதிகளின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதன் போது இளைஞனின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தன்,

இளைஞன் குற்ற மனப்பாங்குடன் அந்த செயலை செய்யவில்லை. வினோதமான முறையில் செய்துள்ளார். இந்த செயலால் தேசிய பாதுகாப்புக்கு எந்த சவாலும் விடப்படவில்லை. குற்ற மனப்பாங்குடன் செய்யாத செயலுக்கு பயங்கரவாத தடை சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் இந்த வழக்கினை விசாரணை செய்ய கூடாது. பொலிஸார் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டால் , இந்த செயலில் தீய எண்ணம் இல்லை என்பதனை அறியலாம் என மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்

அதன் போது தமது விசாரணைகள் முடிவடையவில்லை என பொலிஸார் பிணைக்கு ஆட்சேபணை தெரிவித்தனர்.

அதனை அடுத்து இளைஞனை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , அன்றைய தினம் சம்பவம் தொடர்பிலான பூரண விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என பொலிஸாருக்கு கட்டளை இட்டார்.
Previous Post Next Post


Put your ad code here