கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 5 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த போராட்டம் இரணைமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி நகர் நோக்கி A9 வீதி ஊடாக நகர்ந்தது.
இதேவேளை, போராட்டத்தை தடுக்க பொலிஸார் வீதித்தடைகளை அமைத்து தடுத்தனர். வீதித்தடைகளை தாண்ட பல்கலைக்கழக மாணவர்கள் முற்பட்ட நிலையில் குழப்பமான நிலை ஏற்பட்டது.
கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொலிஸாரால் போராட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றினர்.
குறித்த போராட்டத்தின்போது மிதுசன், கவிதரன், எழில் ராஜ், அபிஷேக், நிவாசன் ஆகிய 5 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து போராட்டகாரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஐவரும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது. போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட ஐவருக்கு தடை விதிக்கப்பட்ட போதும் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
